×

புதுவயலை கலக்கும் புதுமை மோசடி காண்பித்தது நெல்: உள்ளே உமி

காரைக்குடி, செப். 21:  புதுவயலில் நெல்மூடைகள் எனக்கூறி உள்ளே உமியை வைத்து ஏமாற்றி வங்கியில் பல கோடி வரை மோசடி செய்த நபர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இதனால் தற்போது உண்மையான நெல் வியாபாரிகளும் கடன் பெற முடியாமல் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.  காரைக்குடி அருகே புதுவயல், பள்ளத்தூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன.  இங்கு ஆவுடையார்கோவில். தஞ்சை, திருவாடானை, புதுக்கோட்டை,  அறந்தாங்கி, காஞ்சிபுரம், மதுரை, பட்டுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நெல் வரத்து உள்ளது. தினமும் 1000 டன்னுக்கு மேல் நெல் அரவைக்கு கொண்டு வரப்படுகின்றன.  

இப்பகுதி அரிசி சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு  விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. நெல் மூடைகளை அடமானம் பெற்று கொண்டு அதற்கு வங்கிகள் கடன் வழங்குவது வழக்கம். இதன்படி பல்வேறு பகுதிகளில் நெல் வாங்கி வரும் வியாபாரிகள் விலை உயர்வு வரை குடோனில் வைத்திருப்பது பதிலாக அதனை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறுகின்றனர். இதற்கு என தனியாக ஏஜென்ட் உள்ளார். குடோனில் வைக்கப்பட்டுள்ள நெல்லை ஆய்வு செய்து அதன்பின்பு கடன் வழங்குவார்கள். இதுபோன்ற குடோன்களுக்கு மூடிக்கிடக்கும் பல்வேறு ஆலைகளை நெல் வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன்படி புதுவயலில் உள்ள ஒரு குடோனில் ஒரு மூடைக்கு ரூ.1500 வீதம் ரூ.8000 மூடைகளை காண்பித்து ரூ.1 கோடியே 20 லட்சம் வரை நபர் ஒருவர் வங்கியில் கடன் பெற்றுள்ளார்.

இதற்கு ஒரு வருடமாக கடன் தொகை கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள் குடோனில் சென்று பார்த்த போது 6000 மூடைகள் காணவில்லை. 2000 மூடைகள் மட்டுமே இருந்துள்ளது. மேலும் அந்த மூடைகளை பிரித்து பார்த்த போது அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது மூடையின் உள்ளே உமியை வைத்துவிட்டு அதனை சுற்றி மட்டும் நெல்லை வைத்து ஏமாற்றியது தெரியவந்தது. இதேபாணியில் மற்றொரு குடோனில் 2000 மூடைகளுக்கு மேல் உள்ள நெல்லை காண்பித்து வங்கி ஒன்றில் ரூ.40 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றதும் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை இதுவரை அவர் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் மூடைகளை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவை போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏமாற்று வேலைகளால் தற்போது நெல் மூடைகளுக்கு வங்கிகள் கடன் தரமுன் வருவது இல்லை என கூறப்படுகிறது. இதனால் உண்மையான நபர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்