×

வைகை தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வந்தது விவசாயிகள் மகிழ்ச்சி

ராமநாதபுரம், செப். 21: வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு நேற்று காலை வந்து சேர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்குமாறு கலெக்டர் வீரராகவராவ் பொதுப்பணித்துறை செயலாளருக்கு அண்மையில் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து இம்மாதம் 5ம் தேதி வைகை அணை யிலிருந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்காக தண்ணீர் திறக்க அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி செப்.10ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.

இதில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 7 பங்கு அளவாக 909 மி.கன அடியும், சிவகங்கை மாவட்டத்துக்கு 3 பங்கு அளவாக 390 மி.கன அடியும், மதுரை மாவட்டத்துக்கு 2 பங்கு அளவாக 260 மி.கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீரானது ராமநாதபுரம் மாவட்ட எல்கையான பார்த்திபனூர் மதகு அணைக்கு கடந்த 16ம் தேதி வந்து சேர்ந்தது. அன்றைய தினமே கலெக்டர் வீரராகவராவ் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீரை பார்த்திபனூர் மதகு அணையிலிருந்து திறந்து விட்டார். திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை 10 மணிக்கு பெரியகண்மாய் வட கலுங்கு பகுதியான முதுனாள் பகுதி வழியாக காருகுடி படுகை அணைக்கும் வந்தது. மதியம் 2 மணிக்கு தென்கலுங்கு பகுதிக்கும் வந்து சேர்ந்தது.

பெரிய கண்மாயில் ஏராளமான கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருப்பதால் தண் ணீர் வந்துசேர வாய்ப்பில்லை என்று பலரும் நினைத்திருந்த வேளையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் வருவதற்கு ஏற்றவாறு காட்டுக்கருவேல மரங்களை ஓரளவு அகற்றியிருந்ததால் தண்ணீர் வந்து சேர்ந்தது. பெரிய கண்மாய் பகுதிக்கு தண்ணீர் வந்ததையடுத்து இப்பாசனப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
பாசனத்துக்கு பயன்படுகிறதோ, இல்லையோ நிலத்தடிநீர் உயரவும், குடிநீர் ஆதாரங்கள் பெருகவும் பெரிதும் பயன்படும் எனவும் நம்பியிருக்கின்றனர்.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப்பிரிவு செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன் கூறுகையில், ‘நேற்று காலை 10 மணிக்கே பெரிய கண்மாய்க்கு வந்து விட்டது. வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் தற்போது வந்து கொண்டிருக்கிறது. பெரிய கண்மாயின் கடைசி பகுதியான தென்கலுங்கு பகுதிக்கு மதியம் 2 மணிக்கு வந்து சேர்ந்தது. இன்னும் 5 நாட்களுக்கு தண்ணீர் கண்மாய்க்கு வரும்போது கண்மாயும் நிரம்பி விடும். அதன் பின்னரும் தண்ணீர் வந்தால் மற்ற கண்மாய்களுக்கும் தண்ணீரை திருப்பி விட முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை