×

சாக்கடை வசதி இல்லாததால் குடியிருப்பு நடுவே தேங்கி நிற்கும் கழிவுநீர்

பேரையூர், செப்.21: பேரையூர் அருகே வி.அய்யம்பட்டியில் சாக்கடை வசதி இல்லாததால் குடியிருப்பு நடுவே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியம், வண்டாரி ஊராட்சிக்கு உட்பட்டது வி.அய்யம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் போதிய சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் ஊருக்குள்ளும் ஊரைச்சுற்றிலும் தேங்கி நிற்கிறது. மக்கள் துர்நாற்றத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
 மேலும் இரவெல்லாம் கொசுக்கடி தாங்க முடியவில்லை. இதனால் டெங்கு, காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயத்தில் மக்கள் உள்ளனர். சுத்தத்தை சுத்தமாக மறந்துபோன ஊராட்சி நிர்வாகம் இந்த கிராமத்திற்கு வந்து போனதே இல்லை என்கின்றனர் மக்கள்.

இது குறித்து முனியம்மாள் கூறும்போது, ‘‘எங்க பார்த்தாலும் சாக்கடை தேங்கி நிற்கிறது. சுத்தம்பண்ண யாரும் இல்லை. கழிநீர் வாய்க்காலும் கட்டி கொடுக்கவில்லை. குளியல் தொட்டி முழுவதும் பாசம் பிடித்து கிடக்கிறது. குடிக்க தண்ணீர் பிடிக்க சாக்கடையை கடந்துதான் போக வேண்டும். இது குறித்து பல அதிகாரிகளிடம் கூறிவிட்டோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.  மாவட்ட நிர்வாகம்தான் இதை கவனித்து நடவடிக்கை எடுக்க உதவி செய்ய வேண்டும்’’ என்றார். சின்னக்கருப்பன் கூறும்போது, ‘‘மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி சுத்தம் செய்து வருடக் கணக்காகிவிட்டது. 3 நாட்களுக்கு முன் தண்ணீர் தொட்டிக்குள் காக்காய் செத்து கிடந்தது. துர்நாற்றம் தாங்க முடியாமல் பொதுமக்களே சுத்தம் செய்தோம்.

இந்த தொட்டிக்கு வரக்கூடிய குழாய் பல இடங்களில் உடைந்தும் வெடித்தும் கிடக்கிறது. அவற்றிலிருந்து வெளியேறும் தண்ணீரும் சாக்கடையாக மாறி, மீண்டும் தண்ணீர் தொட்டிக்கு மேலே ஏற்றும்போது ஒன்றுசேர்ந்து விடுகிறது. இதனால் குடிதண்ணீர் சுத்தமில்லை.  குளியல்தொட்டி சுத்தமில்லை. சாக்கடை வெளியேற்ற வழியில்லை. துப்பரவுபணியாளர்கள் ஊருக்குள் வருவதே இல்லை. இதனை சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை’’ என்றார்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...