4 மணிநேரம் அட்டகாசம் நாய் கடித்ததால் வெறிபிடித்த காளை மக்களை விரட்டி விரட்டி முட்டியதால் பரபரப்பு

மதுரை, செப்.21: மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் கோயில் காளை ஒன்று உள்ளது. கடைகள் மற்றும் வீடுகளில் இருப்போர் இந்த காளைக்கு பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்குவது வழக்கம். பகலில் வலம் வந்து இரவில் கோயில் பகுதியில் படுத்துக் கொள்ளும்.  நேற்று வழக்கம்போல் ரோட்டில் காளை வந்து கொண்டிருந்தது. அப்போது ரோட்டில் செல்வோரை பார்த்து திடீரென வெறிபிடித்ததுபோல் விரட்டத் துவங்கியது. இதைச் சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். ஒரு முதியவரை கொம்பால் குத்தி வீசியதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக ரோட்டோரம் விழுந்து கதறினார். தொடர்ந்து காளை பலரையும் விரட்டி முட்டிக் காயப்படுத்தியதால் இப்பகுதியே போர்க்களமானது. காயமடைந்த முதியவரை 108 வாகனத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்த வைரமுத்து, போலீசார், வனத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்து கருவேலங்காட்டிற்குள் சென்ற காளை வெளியில் வருவதும் அங்கு வேடிக்கை பார்ப்பவர்களை முட்டித்தள்ளிவிட்டுச் செல்வதுமாக தொடர்ந்தது. சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் 15 பேரும் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்களுடன், மாடுபிடி வீரர்களும் சேர்ந்து கயிற்றை வீசி, சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப்பிறகு அந்த காளை மாட்டை பிடித்துச் சென்றனர்.

மக்கள் கூறும்போது, ‘‘இந்த கோயில் காளை மிகவும் சாந்தமானது. ஒரு தெருநாய் மாட்டின் வாலைக் கடித்திருக்கிறது. மேலும், ஏதோ ஒரு தாவரத்தையும் மாடு தின்றிருக்கிறது. என்ன காரணத்தினாலோ காளைக்கு வெறிபிடித்திருக்கிறது. கால்நடைத்துறையினரும் வரவழைக்கப்பட்டனர். சிகிச்சை தரப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: