மாணவர்கள் குறைவாக இருப்பதாக கூறி 92 பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரத்து இனி அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது சிரமம்தான்

மதுரை, செப்.21: மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 92 அரசு துவக்கப்பள்ளிகளுக்கு ஆண்டு பராமரிப்பு மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் அரசு துவக்கப்பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு வகுப்பு உள்ளவற்றுக்கு ரூ.10 ஆயிரம், இரு பிரிவு வகுப்புகளை கொண்ட பள்ளிகளுக்கு ரூ.17 ஆயிரம் என பராமரிப்புச் செலவு நிதி வழங்கப்பட்டு வருகிறது. பள்ளியின் தலைமையாசிரியரை தலைவராக கொண்ட மேலாண்மைக்குழுவினர், இந்த நிதி மூலம் குடிநீர், மின் சாதனங்கள், கழிப்பறைகள், எழுதும் பலகைகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.

இதேபோல் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளுக்கும் பராமரிப்பு நிதி வழங்கப்படுகிறது. ஆனால் நடப்பாண்டில், அனைவருக்கும் கல்வித்திட்டமானது ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில கட்டுப்பாடுகளும், மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசு துவக்கப் பள்ளிகளுக்கு ஆண்டு பராமரிப்பு நிதி ரத்து செய்யப்பட்டு, அதற்கான சுற்றறிக்கை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 மதுரை மாவட்டத்தில் 959 அரசு துவக்கப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் ஊராட்சிப்பள்ளிகள் 653, மாநகராட்சிப்பள்ளிகள் 26, நகராட்சிப்பள்ளிகள் 8, கள்ளர் பள்ளிகள் 104, சமூக நலத்துறை பள்ளி 1, அரசு உதவிபெறும் பள்ளிகள் 159 ஆகியவை அடங்கும்.   இப்பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் ஆசிரியர்-மாணவர் விகிதமானது 1:18 என்ற அளவில் இருந்தது. ஆனால், நடப்பாண்டில் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 92 பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புற பள்ளிகளாக உள்ளன. மாநிலம் முழுவதும் இது போல் சுமார் 3 ஆயிரம் பள்ளிகள் நிதியை இழக்கும் நிலையில் உள்ளன.

 இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே துவக்கப்பள்ளிகளுக்கான பராமரிப்பு நிதியை முறையாக செலவிடவில்லை என்ற புகார் எழுந்தது. அதனாலேயே தற்போது மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி நிதி மறுக்கப்பட்டுள்ளது. துவக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்கி நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

Related Stories: