திருமங்கலம் ஒன்றியத்தில் 27 பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பே இல்லை

திருமங்கலம், செப்.21: திருமங்கலம் ஒன்றியத்தில் 27 பள்ளிகளின் கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாகவும், மாணவர்களை பாதுகாப்பான இடங்களில் அமரவைத்து பாடம் நடத்த அறிவுறுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  திருமங்கலம் அடுத்துள்ள கரடிக்கல்லில் கள்ளர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு வாரண்டாவில் உள்ள சிமெண்ட் பூச்சு சமீபத்தில் இடிந்து விழுந்தது. யாருக்கும் காயங்கள் இல்லை. இது குறித்து வந்த தகவல்களை அடுத்து திருமங்கலம் பிடிஓக்கள் தர்மராஜா, உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கரடிக்கல் பள்ளியில் ஆய்வு நடத்தினர்.

இதை தொடர்ந்து திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 112 அரசுப்பள்ளிகளிலும் ஆய்வு நடத்தினர். இதில் 27 பள்ளிகளில் கட்டிடங்கள் சிதைவடைந்திருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் கூறுகையில், ‘‘இது குறித்து அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் பழுதடைந்த கட்டிடங்களை அகற்றிவிட்டு சீரமைக்கப்படும். அதுவரையில் மாணவர்களை பாதுகாப்பான இடங்களில் அமரவைத்து பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

Related Stories: