திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் புதிய ஓட்டு மிஷின் சோதனை துவங்கியது

திண்டுக்கல், செப். 21: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி துவங்கியது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2019ல் பயன்படுத்துவதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ள புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் கருவி ஆகியவற்றை 100 சதவீதம் பரிசோதனை செய்வதற்காக முதல் கட்ட சரிபார்ப்பு பணி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை வகிக்க, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணி துவங்கப்பட்டது.

பெங்களுரு பெல் நிறுவனத்திலிருந்து 10 பொறியாளர்கள் இப்பணிக்காக வந்துள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக மாவட்ட வருவாய்துறை பணியாளர்கள், அவர்களை கண்காணிக்க மேற்பார்வை அலுவலர்கள் என சுழற்சி முறையில் 100க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஆயுதம் ஏந்திய காவலர்கள், கண்காணிப்பு கேமரா என பலத்த பாதுகாப்புடன் இப்பணி அரசு பொது விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் தொடர்ச்சியாக நடைபெறும். இதுதொடர்பான அனைத்து பணிகளையும் மேற்பார்வை செய்வதற்காக மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் தனி வட்டாட்சியர் (தேர்தல்) சுப்பிரமணியபிரசாத் மற்றும் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: