காந்தி மார்க்கெட்டில் கால் வைக்க முடியல சேறு, சகதியில் நடக்குது விற்பனை வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி

திண்டுக்கல், செப். 21: திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டுக்கல் கோட்டைக்குளம் ரோட்டில் மாநகராட்சியின் சொந்தமான இடத்தில் அண்ணல் காந்தி காய்கனி மார்க்கெட் செயல்படுகிறது. முன்பு இம்மார்க் கச்சேரி தெருவில் இயங்கியது. இடப்பற்றாகுறை காரணமாக 1992ம் ஆண்டில் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த மார்க்கெட்டில் 365 காய்கனி கடைகள் உள்ளன. இதில் விவசாயிகள் நேரிடையாக பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தினசரி சுமார் 150 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

காலை 5மணிக்கெல்லாம் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கும் சில்லரை வியாபார மார்க்கெட் மதியம் 2 மணியளவில் நிறைவடையும். பின்பு மறுபடியும், மாலை 5மணிக்கு மொத்த வியாபாரிகளுக்கான காய்கறிகள் ஏல விற்பனை தொடங்கி, இரவு 10 மணி வரையில் நீடிக்கும். இதன்மூலம் மார்க்கெட்டில் தினமும் பல லட்ச ரூபாய் வர்த்தகம் நடப்பது சொல்லி தெரிவது இல்லை. ஆனால் இவ்வளவு வருவாய் ஈட்டியும் இங்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என்பதே வேதனையான விஷயம். மார்க்கெட் முழுவதும் நடக்க முடியாத அளவிற்கு சகதிகாடாகவே உள்ளது. இந்த சேற்றிலே பொதுமக்களும், வாகனங்களும் சென்று திரும்ப வேண்டும். சில சமயங்களில் லோடுலாரி இதில் சிக்கிக்கொள்ளும். அப்போதெல்லாம் கிரேன் மூலம் அவை நகர்த்தப்படுகிறது.

இதுகுறித்து மார்க்கெட் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘காந்தி மார்க்கெட்டில் தினசரி பல லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் மார்க்கெட்டில் எந்தவித அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி செய்து தரவில்லை. ஆனால் வரி வசூலில் மட்டும் கணக்கச்சிதமாக உள்ளனர். எனவே வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி மார்க்கெட்டில் கழிப்பிடம், குடிநீர், மின்விளக்கு, பார்க்கிங், பேவர்பிளாக் பாதை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமரா அவசியம் பொருத்த வேண்டும். போக்குவரத்து சீரமைக்க நிரந்தரமாக போலீசார் தற்காலிக மையம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்’’ என்றனர்.

Related Stories: