புது டாஸ்மாக் கடையா: பொங்கிய ெபண்கள் வத்தலக்குண்டு அருகே பரபரப்பு

வத்தலக்குண்டு, செப். 21: கணவாய்பட்டியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வத்தலக்குண்டு அருகே கணவாய்பட்டி ஆசிரமத்தையொட்டி புதிய டாஸ்மாக் கடை அமைக்க கடந்தாண்டு கட்டிடம் கட்டிடப்பட்டது. இதை எதிர்ப்பு அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அக்கட்டிடத்தில் மதுபாட்டில்கள் பெட்டி, பெட்டியாக கொண்டு வந்து இறக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மதியம் 3.30 மணியளவில் அக்கட்டிடம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மதுபாட்டில்களை திரும்ப எடுத்து செல்லும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் வந்த வாகனங்கள் இருபுறமும் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன. தகவலறிந்ததும் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் சமரசம் ஆகவில்லை. பின்னர் மாலை 5.45 மணியளவில் இறக்கப்பட்ட மதுபாட்டில் பெட்டிகள் திரும்ப எடுத்து செல்லப்பட்டன. அதன்பின்பே மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

அப்பகுதியினர் கூறுகையில், இங்குள்ளவர்கள் பெரும்பாலானோர் கூலி வேலையே செய்து வருகின்றனர். இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் குடும்பமே சீரழிந்து விடும்’’ என்றனர்.

Related Stories: