×

ஒரு மாதமா குடிநீர் ‘கட்’ மாநகராட்சி முற்றுகை

திண்டுக்கல், செப். 21: ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரம் பெண்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சி 7வது வார்டுக்குட்பட்டது கிழக்கு கோவிந்தாபுரம். இங்கு சுமார் 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் விநியோகம் கடந்த 3 மாதமாக முற்றிலுமாக இல்லை. இதனால் குடிநீர் தேடி வெகுதூரம் அலைந்தும், விலைக்கு வாங்கியும் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் கொதிப்படைந்த இப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். அவர்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் குடிநீர் வந்து 3 மாதமாகி விட்டது. பழைய பைப் மூலம் குடிநீர் சீராக வந்தது. தற்போது ஜிக்கா பைப் பதிக்கும் பணியை காரணம் கூறி குடிநீர் சப்ளையை முற்றிலுமாக நிறுத்தி விட்டனர். எனவே ஜிக்கா பணிகளை விரைந்து முடித்து குடிநீர் விநியோகத்தை சீராக்க வேண்டும்.  இல்லாவிட்டால் எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

Tags :
× RELATED நத்தம் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு