துப்புரவு பணிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு : சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

துரைப்பாக்கம்: துப்புரவு பணியை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சியை கண்டித்து சோழிங்கநல்லூர் 15வது மண்டல அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால், 9 வார்டுகளில் குப்பைகள் தேங்கியது. சென்னை மாநகராட்சி 1, 2, 3, 7, 11, 12, 14, 15 ஆகிய மண்டலங்களில் துப்புரவு பணியை தனியாரிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சோழிங்கநல்லூர் 15வது மண்டல அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நேற்று  காலையில் 6 மணி முதல் 8 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் 15வது மண்டலத்தில் அடங்கிய 9  வார்டுகளிலும் குப்பைகள் தேங்கியது.

தகவலறிந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து, துப்புரவு பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில், ஈடுபட்டனர். அப்போது உங்களுடைய கோரிக்கை குறித்து, உடனே நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.இதுகுறித்து பணியாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘துப்புரவு பணிகளை தனியாருக்கு விட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. துப்புரவு பணியை தனியாருக்கு வழங்க மாட்டோம் என்று ஏற்கனவே மேயர்களாக இருந்த மா.சுப்பிரமணியம் மற்றும் சைதை துரைசாமி உறுதி அளித்தனர். கடந்த 2017 ஜூன் 27ம் தேதி சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் மாநகராட்சி பணியாளர்களை வைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநலச்சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன. பணி தனியாருக்கு விடப்பட்டதால் பல்வேறு முறைகேடுகள் நடந்தது என்றும் சரியாக பணிகள் நடைபெறவில்லை என்றும், இதனால் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் தனியார் மயமாக்கக் கூடாது. தற்காலிக ஊழியர்களை உடனே நிரந்தரமாக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: