ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி: கள்ளக்காதலியுடன் காவலர் ‘எஸ்கேப்’

சென்னை: ஏலச்சீட்டு நடத்தி ₹10 லட்சத்துக்கு மேல் மோசடி செய்து, கள்ளக்காதலியுடன் போலீஸ்காரர் தலைமறைவானார். அவரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (40). அண்ணாநகர் காவல் நிலையத்தில் டிரைவராக வேலை செய்கிறார். இவரது மனைவி சுமதி. ஸ்ரீதரனுக்கும், கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 2வது பிளாக்கை சேர்ந்த பிரேமா (35) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, இருவரும் கொடுங்கையூரில் தனி குடித்தனம் நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், கடந்த 4 ஆண்டாக ஸ்ரீதரனும், பிரேமாவும் அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இதில், அப்பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர் உள்பட ஏராளமானோர் ₹50 ஆயிரம் முதல் ₹1 லட்சம் வரை சீட்டு கட்டி வந்துள்ளனர்.இதில், ஸ்ரீதரன் மற்றும் பிரேமா, ஆரம்ப காலத்தில் பலருக்கு ஏலச்சீட்டு பணத்தை முறையாக கொடுத்து வந்துள்ளனர். பின்னர், சரிவர பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளதாக தெரிகிறது. பலமுறை அவர்களிடம் பணத்தை கேட்டும், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், பலமுறை பணத்தை கேட்டும் தராததால் பாதிக்கப்பட்டவர்கள், சுமார் 10 பேர் நேற்று முன்தினம் மாலை தரன் வீட்டுக்கு சென்றனர். ஆனால், அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. விசாரித்ததில் ஸ்ரீதரன், பிரேமா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர் என தெரிந்தது. இதுகுறித்து சாந்தி உள்பட 10 பேர், கொடுங்கையூர் போலீசில் புகார் அளித்தனர். அதில், ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த போலீஸ்காரர் மற்றும் பெண் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை வாங்கி தரவேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலியுடன் தலைமறைவான போலீஸ்காரர் தரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: