எர்ணாவூரில் அதிகாரிகள், ஆளும்கட்சியினர் துணையுடன் இடைத்தரகர்கள் பேரம் : அரசு குடியிருப்புகள் பல லட்சத்திற்கு விற்பனை

திருவொற்றியூர்: எர்ணாவூரில் புதிதாக கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை இடைத்தரகர் சிலர், அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சியினர் உதவியுடன் பல லட்சத்திற்கு விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வடசென்னையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சென்னையில் சாலை விரிவாக்கத்தின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் மாற்று குடியிருப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருவொற்றியூர் அருகே எர்ணாவூரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் பல கோடி செலவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த குடியிருப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேலும் பல குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, பல மாதங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படாமல் உள்ளது. இதுபோல் பயன்படுத்தப்படாமல் உள்ள குடியிருப்புகளில் மர்ம நபர்கள் சிலர், சமுக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரங்களில் மது அருந்துவது, சீட்டு விளையாடுவது உள்பட பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடிக்கும் மர்மநபர்களுக்கு இந்த குடியிருப்புகள் பதுங்கும் இடமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில், இந்த குடியிருப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடுகள் இல்லாமல் சாலையோரத்தில் குடியிருப்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், பல கோடி செலவில் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள் பயானிகளுக்கு கொடுக்காததால் குடியிருப்புகள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, பொதுமக்கள்  மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘திருவொற்றியூர் தொகுதியில் நலிவுற்ற மீனவர்கள், தினகூலி தொழிலாளர்கள், திருநங்கைகள், சடலம் அடக்கப் பணியாளர்கள், மாநராட்சி துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் வாடகை வீட்டிலும், வாடகை கொடுக்க முடியாதவர்கள் தெருவோர குடிசைகளில் பாதுகாப்பு இல்லாமல் வாழ்கின்றனர். இதுபோன்ற மக்கள், தங்களுக்கு எர்ணாவூரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யும்படி கேட்டும் கிடைக்கவில்லை. ஆளும் கட்சியினர் துணையுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை ஒதுக்கீடாக பெற்றவர்கள், அதை வாடகைக்கும், குத்தகைக்கும் விட்டுள்ளனர். இதற்கு குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் சிலரும் உடந்தையாக உள்ளனர். குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் இனியாவது எர்ணாவூர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் தகுதியானவர்களுக்கு வீடு ஓதுக்கீடு செய்ய வேண்டும். முறைகேடாக ஒதுக்கீடு பெற்றவர்களிடம் இருந்து குடியிருப்பை மீட்க வேண்டும்.நலிவுற்ற ஏழைகளுக்காக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக கிடைப்பதில்லை. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பை, இடைத்தரகர்கள் சிலர் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் உதவியுடன் பல லட்சத்திற்கு விற்பனை செய்கின்றனர். இதற்கான ஒதுக்கீட்டு ஆணையையும் அவர்கள் முறைகேடாக தயாரித்து வழங்குகின்றனர். சமீபத்தில் திருவொற்றியூர் பெரியார் நகர், ராஜா சண்முகம் நகர், ஒத்தவாடை போன்ற பகுதிகளில் உள்ள அரசு குடியிருப்பு பெற்று தருவதாக கூறி பொதுமக்களிடம் இடைத்தரகர்கள் ₹25 ஆயிரம் வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே, குடிசை மாற்று வாரிய குடியிருப்பை ஒதுக்கீட்டை வெளிப்படையாக செய்ய வேண்டும். இங்கு ஒதுக்கீடு பெற்றவர்கள் யார் என்பது குறித்து அறிக்கை வெளியிடவேண்டும். அப்போது தான் ஒதுக்கீட்டில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க முடியும்’’இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 திருவொற்றியூர் பெரியார் நகர், ராஜா சண்முகம் நகர், ஒத்தவாடை போன்ற பகுதிகளில் உள்ள அரசு குடியிருப்பை பெற்று தருவதாக கூறி பொதுமக்களிடம் இடைத்தரகர்கள் ₹25 ஆயிரம் வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

 குடியிருப்பு ஒதுக்கீட்டை வெளிப்படையாக செய்ய வேண்டும். இங்கு ஒதுக்கீடு பெற்றவர்கள் யார் என்பது குறித்து அறிக்கை வெளியிடவேண்டும். அப்போது தான் ஒதுக்கீட்டில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க முடியும்.

Related Stories: