ஆட்டோ காஸ் நிலையத்துக்கு எதிர்ப்பு- வாயில் கருப்பு துணி கட்டி பெண்கள் போராட்டம்

காசிமேடு: ஆட்டோக்களுக்கு காஸ் நிரப்பும் நிலையத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி, வாயில் கருப்பு துணி கட்டி பெண்கள் போராட்டம் நடத்தினர்.சென்னை காசிமேடு, ஜீவரத்தினம் சாலையில் கடந்த 6 மாதங்களாக ஆட்டோக்களுக்கு காஸ் நிரப்பும் நிலையம் அமைந்துள்ளது. முன்னதாக இந்த பகுதியில் காஸ் நிரப்பும் நிலையம் திறந்தால், இதை சுற்றியுள்ள பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக 2 முறை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆனால், நேற்று முன்தினம் புதிய காஸ் நிரப்பும் நிலையம் திறக்கப்பட்டது. இதை அறிந்ததும், ஜீவரத்தினம் சாலையின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட மக்கள் காஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, காசிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில், நேற்று காலை மீண்டும் காஸ் நிலையம் திறக்கப்பட்டது. இதையடுத்து, சிஜி காலனி, காசி குப்பம், ஒய்எம்சிஏ குப்பம், விநாயகபுரம் உள்பட சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்கு திரண்டு, காஸ் நிரப்பும் நிலையத்தின் எதிரே வாயில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து காசிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, கலையும்படி கூறினர். அப்போது அவர்கள், ‘‘நாங்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல், சாலையோரத்தில் எங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறோம். அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் நாங்கள், இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம். காஸ் நிரப்பும் நிலையத்தை மூடும் வரை நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்’’ என்றனர். சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: