சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவி பதிவு துறை தலைவர் ஆய்வு : ஊழியா்களுக்கு எச்சரிக்கை

திருவொற்றியூர்: தினகரன் செய்தி எதிரொலியாக சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவி பதிவு துறை தலைவர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.  திருவொற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், 4 மாதமாக சார் பதிவாளர் அலுவலகம் காலியாக உள்ளது. இதனால், போதிய அனுபமில்லாத தலைமை அலுவலர் பணியில் இருப்பதால், பத்திரப்பதிவுக்கு நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய உள்ளது. இதுகுறித்து, அவரிடம் முறையீட்டால் சர்வர் பழுது என கூறி காக்க வைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், வில்லங்கம் மற்றும் நகல் கொடுக்கும் நபர்கள் மதியத்துக்கு மேல் அலுவலகத்தில் இருப்பதில்லை. பணம் கொடுத்தால் உடனடியாக வில்லங்க சான்று வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. நேற்று முன்தினம் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்த ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.  இதுதொடர்பான செய்தி நேற்றைய தினகரனில் புகைப்படத்துடன் வெளியானது.

இதன் எதிரொலியாக, உதவி பதிவு துறை தலைவர் மஞ்சுளா மற்றும் அதிகாரிகள், சென்னை திருவொற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை திடீர் ஆய்வு நடத்தினர்.  அங்கு பத்திரப் பதிவு பணிகள் குறித்து அங்கிருந்த தலைமை அலுவலர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், பத்திரப்பதிவுகளை விரைந்து செய்ய வேண்டும். ஊழியர்கள், தங்களது அலுவலக நேரங்களில், சொந்த வேலைக்காக வெளியே சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், தங்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். சார் பதிவாளர் மற்றும் கூடுதலாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். இட நெருக்கடி இருப்பதால், இந்த அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுபற்றி உயர் அதிகாரிகளுடம் கலந்தாலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி பதிவு துறை தலைவர் உறுதியளித்தார்.

Related Stories: