கஞ்சா அடிப்பதற்காக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது

கும்பகோணம், செப். 21:  கஞ்சா அடிப்பதற்காக கும்பகோணம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தேப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (36). இவர் கடந்த 18ம் தேதி தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு பைக்கில் சென்றார். பின்னர் பைக்கை வெளியில் நிறுத்தி விட்டு கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் சங்கர் கணேஷ் புகார் செய்தார். இதேபோல் கோவிலாச்சேரியை சேர்ந்தர்  இளையராஜா (42) என்பவர் தாராசுரம் கூட்டுறவு சங்கத்தில் நகைகளை அடகு வைப்பதற்காக பைக்கில் வந்தார். பின்னர் சங்கத்தின் முன் பைக் பெட்டியில் 4 பவுன் நகையை வைத்து விட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பைக் பெட்டியை உடைத்து 4 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் இளையராஜா புகார் செய்தார்.

இதேபோல் மகாராஜபுரம் மணல்மேட்டை சேர்ந்த அருள் (27) என்பவர் தனது பைக்கின் முன்கவரில் 4 பவுன் நகையை வைத்து கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி சென்றார். அப்போது கொரநாட்டுகருப்பூர் சாலையோரத்தில் பைக்கை நிறுத்தி விட்டு பம்ப்செட்டுக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பைக்கில் வைத்திருந்த நகையை காணவில்லை. இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் அருள் புகார் செய்தார். கும்பகோணம் தாலுகா காவல் நிலையம் பகுதியில் தொடர் திருட்டு நடப்பதால் எஸ்ஐ தென்னரசு தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தாராசுரம் பகுதியில் திருட்டு கும்பல் நிற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தாராசுரத்தை சேர்ந்த தக்காளி (எ) பிரகாஷ் (19), விக்கி (எ) விக்னேஷ் (20), பேட்டை தெருவை சேர்ந்த ஹரிஷ் (19), ரமேஷ் (20), சுபாஷ் (19) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தாராசுரம் பகுதியில் பல நாட்களாக பைக் திருட்டு, வழிப்பறி, நகை திருட்டுகள் நடந்து வந்ததால் தனிப்படை அமைத்து ரகசியமாக குற்றவாளிகளை கண்காணித்து வந்தோம். அப்போது தாராசுரத்தில் பைக்கை திருடி விட்டு செல்லும்போது சாலையில் சென்ற ஒருவரிடம் ரூ.200யை வாலிபர் பறித்து சென்றான். பணத்தை பறி கொடுத்தவர் அடையாளத்தின்பேரில் 5 பேரை கைது செய்துள்ளோம். மேலும் சிலர் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை விரைவில் பிடிப்போம். 5 பேரிடம் விசாரித்தபோது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இரவு நேரத்தில் கஞ்சா அடித்து விட்டு சாலையில நிற்கும் பைக்கை திருடி செல்வர். மேலும் கஞ்சா அடிப்பதற்காக திருடி சென்ற பைக்கை விற்று விடுவர். அந்த பணம் தீர்ந்தவுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது என்றார்.

Related Stories: