பஸ் வசதி கேட்டு கலெக்டரிடம் முறையிட வந்த மாணவிகள் விரட்டியடிப்பு

கும்பகோணம், செப். 21: பஸ்  வசதி கேட்டு கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்த கலெக்டர், அதிகாரிகளிடம் முறையிட வந்தபோது சந்திக்க விடாமல் கல்லூரி மாணவிகளை செக்யூரிட்டி விரட்டியடித்தார். திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் அணை உடைந்ததால் பாலத்தின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் முதல் அணைக்கரை கீழணையில் பாலத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இருபகுதியில் இருந்தும் பொதுமக்கள் பஸ்சில் இருந்து இறங்கி ஆட்டோ மூலம் பாலத்தை கடந்து சென்று மறு பகுதியில் இருந்து மீண்டும் பஸ் ஏறி சென்று வருகின்றனர். அணைக்கரை பாலத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கும்பகோணத்துக்கு நீலத்தநல்லூர் வழியாக இயக்கப்படுவதால் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் உரிய நேரத்தில் பேருந்துகள் வராததால் கும்பகோணத்துக்கு தாமதமாக வந்து செல்கின்றனர்.

எனவே காலை 8.15 மணிக்கு வரும் பேருந்தை காலை 7.10  மணிக்கு இயக்குமாறு கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் உள்ள பொது மேலாளரை சந்தித்து முறையிடுவதற்காக கும்பகோணத்தில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி மாணவிகள், தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள் பலமுறை வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்காமல் செக்யூரிட்டிகள் விரட்டுவர். இந்நிலையில் நேற்று மாலை டீசல் சிக்கனத்தில் உயரிய திறன் பெற்ற ஓட்டுனர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக வந்த கலெக்டர் அண்ணாதுரை, போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள் மற்றும் அனைத்து பொது மேலாளர்களிடம் முறையிட ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து கும்பகோணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்தனர். அப்போது அவர்களை கலெக்டர் மற்றும் போக்குவரத்து கழக பொது மேலாளர்களை சந்திக்கவிடாமல் பணிமனையில் உள்ள செக்யூரிட்டிகள் விரட்டினர். இதையடுத்து ஏமாற்றத்துடன் மாணவிகள் சென்றனர்.

Related Stories: