×

புதுகை அரசு மகளிர் கல்லூரியில் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

புதுக்கோட்டை, செப். 21: புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்கியது.புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில் யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை வகித்து பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.   இந்த பயிற்சி வகுப்பில் முதற்கட்டமாக அரசு மகளிர் கல்லூரியில் அடிப்படை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 80 மாணவிகளுக்கு போட்டி தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் மாணவிகளுக்கு போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாதிரி வினாத்தாள், கையேடுகள் வழங்கப்படுவதுடன் தலைச்சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். பயிற்சி வகுப்பில் கலெக்டர் கணேஷ் பேசுகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் படித்த வேலைவாய்ப்பற்றவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக இங்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட உள்ள குடிமை பணிகள் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவிகள் பயிற்சி வகுப்பினை முறையாக கற்று போட்டி தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகளை தொவித்து கொள்கிறேன் என்றார். பயிற்சி வகுப்பில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் சுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) வேல்முருகன், அரசு மகளிர் கலை கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது