ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால் புதுவைக்கு பாதிப்பு

புதுச்சேரி, செப். 21: புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாவில் உள்ள சவால்களும்,  வாய்ப்புகளும் என்னும் தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இக்கருத்தரங்கை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கி வைத்து பேசியதாவது:

 புதுவையில் மத்திய அரசின் நிதி உதவியுடன் ரூ.183 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.  சுற்றுலாத்துறைக்கு மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெற்ற மாநிலம் புதுவை தான். மத்திய அரசிடம் இன்னும் 2 மாதங்களில் மேலும் ரூ.230 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். புதுவையில் புராதான சுற்றுலா, ஆன்மிக சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. புதுவைக்கு சுற்றுலா, பெட்ரோலிய பொருட்கள் மீதான விற்பனை வரி, மது விற்பனை ஆகியவை மூலம் தான் 35 சதவீத வருமானம் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் புதுவைக்கு வருவாய் குறைந்து பாதிப்பு ஏற்படும்.

 புதுவைக்கு உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான சுற்றுலா வசதிகளை செய்து கொடுத்தால் தான் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் புதுவை அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கும். புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் 3 நாள்களுக்கு மேல் தங்கியிருந்து சுற்றுலா செல்ல முடியாத நிலை உள்ளது. இதை போக்கும் வகையில் புதிய திட்டங்கள் அமல்படுத்த அமைச்சரவை அண்மையில் முடிவு செய்துள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவாவில் இருப்பது போல் கேசினோ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக இன்னும் ஒரு வாரத்துக்குள் தமிழக - புதுவை சுற்றுலா அமைச்சர்கள், தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோர் கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை  தமிழக பகுதியில் தமிழக அரசு அனுமதியுடன் நில ஆர்ஜிதம் செய்ய புதுவை அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளோம். புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் செல்லும் விமான சேவை வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், புதுவையில் இருந்து திருப்பதி, கொச்சிக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 இதில் பிடிடிசி சேர்மன் எம்என்ஆர்.பாலன் எம்எல்ஏ, சுற்றுலாத்துறை செயலர் பார்த்திபன், இந்திய சுற்றுலா சங்க தலைவர் ஸ்டீவ் பார்கியா மற்றும் ஓட்டல் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: