படகுகளில் கருப்புக்கொடி கட்டி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, செப். 21: புதுச்சேரியில் தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் நேற்று படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் புதுவை, தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 படகுகளில் தினமும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். துறைமுக முகத்துவாரத்தை சரிவர தூர்வாராததால் அடிக்கடி படகுகள் தரைதட்டி சேதமடைந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் படகுகள் சேதமாயின. எனவே, முகத்துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்த வலியுறுத்தியும், முகத்துவாரத்தின் இருபுறமும் கருங்கற்கள் கொட்டி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் விசைப்படகு மீனவர்கள் கடந்த 10ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல், கடலில் இறங்கி போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.இந்த நிலையில் நேற்று படகுகளில் கருப்புக் கொடி கட்டி விசைப்படகு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், துறைமுகத்தில் கருப்புக்கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால் தினமும் ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் பந்த் நடத்தப்படும் எனவும் விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: