சமூக விரோதிகளின் புகலிடமான கணுவாபேட்டை அரசு பள்ளி

வில்லியனூர், செப். 21: வில்லியனூர் அருகே கணுவாப்பேட்டை பகுதியில் 1978ம் ஆண்டு ஆரம்ப பள்ளி கட்டப்பட்டது. இதன்மூலம் கணுவாப்பேட்டை, புதுநகர், உத்தரவாகிணிபேட், பெரியபேட், எஸ்எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயனடைந்தனர். நாளுக்குநாள் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் 2003ம் ஆண்டு நீண்ட சுற்றுச்சுவருடன் கூடுதலாக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் 2010ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.  இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு தானே புயலின் போது பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்தது. மேலும், ஆங்காங்கே சில மர்ம நபர்கள் சுற்றுச்சுவரை இடித்து ஓட்டை போட்டுள்ளனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில மர்ம நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மது அருந்துதல், கஞ்சா அடித்தல் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்களை பள்ளியின் உள்ளேயும் மைதானத்திலும் உடைத்துவிட்டு, கழிவறையில் தூக்கி போட்டுவிட்டு செல்கின்றனர்.

இதனால் உடைக்கப்பட்ட கண்ணாடி துண்டுகள் பள்ளி மாணவர்கள் விளையாடும்போது அவர்களின் காலை கிழித்து விடுகின்றன. மேலும் கழிவறையில் போடுவதால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு விடுகிறது. வாரந்தோறும் விடுமுறை கழிந்து வரும் ஊழியர்கள் பள்ளியில் சிதறி கிடக்கும் மது பாட்டில்களை அப்புறப்படுத்த வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பள்ளியை சுற்றிலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் இப்பகுதியில் மின் விளக்கு வசதி மற்றும் பள்ளியில் பாதுகாவலர் இல்லாதால் சில மர்ம நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு இந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். எனவே உடனடியாக பள்ளியை சுற்றிலும் உள்ள சுற்றுச்சுவரை சீரமைத்து, பாதுகாவலரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: