பஞ்சாலை பொதுமேலாளரை முற்றுகையிட்ட ஊழியர்கள்

புதுச்சேரி, செப். 21: புதுச்சேரி சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலை தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக, நிர்வாகத்தின் பொது மேலாளரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரியில் உள்ள பாரதி-சுதேசி பஞ்சாலைகளின் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சம்பளத்ைத வழங்கக்கோரி முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்த பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இதனால் அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த 7ம் தேதி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடலூர்-புதுச்சேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே நேற்று முன்தினம் முதல்வர் நாராயணசாமியை பஞ்சாலை தொழிலாளர்கள் சந்தித்தனர். அப்போது 2 மாத சம்பளமான ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி உறுதியளித்ததோடு, இதுதொடர்பான கோப்பை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஆலையில் நூல் நூற்று வாங்கி சென்ற தனியார் நிறுவனத்தினர், அதற்கான தொகை ரூ.30 லட்சத்தை ஆலை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர். இந்த தொகையில் ரூ.2 லட்சத்தை கேண்டீன் ஊழியர்களுக்கு வழங்கியதாகவும், 9 லட்சத்தை ஜிஎஸ்டி பில் கட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்டதும் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்தனர்.தங்களுக்கு சம்பளம் வழங்காத நிலையில், தங்களுடன் கலந்தாலோசிக்காமல், ஜிஎஸ்டி பில்லை ஏன் கட்ட வேண்டும் என கேட்டு பொது மேலாளர் ஸ்ரீதரை, தொழிலாளர்கள் நேற்று மாலை முற்றுகையிட்டனர். பஞ்சாலை தொழிலாளர்கள் காங்கிரஸ் தலைவர் குப்புசாமி, பாரதி பஞ்சாலை தொழிலாளர்கள் சங்க தலைவர் செல்வகுமார், ஐஎன்டியுசி தங்கமணி, என்ஆர்டியுசி கண்ணதாசன், சிஐடியு கோபிகா ஆகியோர் தலைமையில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமேலாளர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த பஞ்சாலை நிர்வாக இயக்குநர் பிரியதர்ஷினி மற்றும்  முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

தொழிலாளர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டதால் போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். அவர்கள் கலைந்து போக மறுத்த நிலையில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து நிர்வாக இயக்குநர் பிரியதர்ஷினி மற்றும் இன்ஸ்பெக்டர் பாபுஜி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தற்போது கையிருப்பில் உள்ள பணத்தில் தினக்கூலி ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். மீதியுள்ள பணத்தில் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சதவீத அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: