ராஜீவ்காந்தி சிலை சந்திப்பில் மேம்பால பணி விரைவில் துவங்கும்

புதுச்சேரி, செப். 21: புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை சந்திப்பில் மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மகிளா காங்கிரசுக்கு புதிய லோகோ மற்றும் கொடி அறிமுக விழா நேற்று காலை நடந்தது. கட்சியின் மாநில தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மகிளா காங்கிரஸ் தலைவி பிரேமலதா வரவேற்றார். முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு சின்னம் மற்றும் கொடியை அறிமுகம் செய்து கொடியேற்றி வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அனந்தராமன், விஜயவேணி மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறும்போது, மகிளா காங்கிரஸ் லோகோவை அறிமுகம் செய்து, கொடி ஏற்றி வைத்துள்ளோம். இதையடுத்து, சக்தி என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் நடந்தது. இதேபோல் மாநிலம் முழுவதும் தொகுதி, பூத் வாரியாக நிகழ்ச்சி நடத்தப்படும். புதுச்சேரியில் சிறப்பான முறையில் மகிளா காங்கிரஸ் செயல்படுகிறது.

நில ஆர்ஜித பணிகள் முடிவடையாததால் அரும்பார்த்தபுரம் மேம்பால பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் 9 பேர் போதுமான இழப்பீடு இல்லை எனக்கூறி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். நீதிமன்றம் என்ன தொகை கொடுக்க சொல்கிறார்களோ அது சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். நில ஆர்ஜிதம் முடிவடைந்ததும் கட்டுமான பணிகளை முடித்து விரைவில் பாலம் திறக்கப்படும். தற்போது அங்கு தற்காலிகமாக ஒரு வழிபாதையாக போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  நகர பகுதியில் ராஜீவ்காந்தி சிலை, இந்திராகாந்தி சிலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசை அணுகியுள்ளோம். ராஜீவ்காந்தி சிலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு வாய்மொழியாக கூறியுள்ளது. விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்.

இந்திராகாந்தி சிலை சந்திப்பில் மேம்பால பணிகள் தொடங்குவதற்கு முன்பாக, நெல்லித்தோப்பு பகுதியில் நில ஆர்ஜிதம் செய்ய ேவண்டியுள்ளது. அது முடிவடைந்த பிறகு தான் இந்திரா காந்தி சிலை சந்திப்பில் மேம்பால பணிகள் துவங்கப்படும். ஒரே நேரத்தில் இரண்டு மேம்பால பணிகளை தொடங்கினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமப்படுவார்கள். ஆகையால் முதலில் ராஜீவ்காந்தி சிலை சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படும்.மக்கள் ஆதரவோடு, ஒத்துழைப்புடன் இந்த ஆட்சி அமைந்துள்ளது. மக்களுக்காக நலத்திட்டங்களை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து நிறைவேற்றி வருகிறோம். மக்கள் பிரச்னைகளை நாங்கள் சொல்லும்போது, அதிகாரிகள் அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். மக்கள் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் கடமை. அதிகாரிகள் இதை நல்லமுறையில் செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: