கவர்னர் கிரண்பேடியே காரணம்

புதுச்சேரி, செப். 21:  புதுவையில் சொசைட்டியின் கீழ் செயல்படும் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் தாமதமாக கிடைப்பதற்கு கவர்னர் கிரண்பேடி மேற்கொள்ள நடவடிக்கைகளே காரணம் என்று அமைச்சர் கமலக்கண்ணன் குற்றஞ்சாட்டினார். மேலும் பொறுத்திருந்து ஊதியம் பெறும் மனநிலை ஊழியர்களுக்கு வரவேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி  உயர்கல்வி துறையின் கீழ் சேவை அடிப்படையில் சொசைட்டி மூலம் கல்லூரிகள் இயங்கி  வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு மானியம் மற்றும் நிதி ஒதுக்கீடு  முதல்வர் அதிகாரத்துக்குட்பட்டே இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இதனால்  குறிப்பிட்ட தேதிக்குள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடைத்து வந்தது.

ஆனால் மானியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கும்  அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளதாக கவர்னர் கிரண்பேடி தெரிவித்து விட்டார்.  ரூ.1 லட்சம் மானியமாக இருந்தால்கூட தன்னுடைய பார்வைக்கு வராமல் எதையும்  செய்யக்கூடாது என நிதித்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஊதியம் வழங்குவதில்  நிர்வாக ரீதியாக தாமதம் ஏற்பட்டது. இதனால் இந்த மாதம்  சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில்  ஆசிரியர்கள் வீதிக்கு வந்து  போராட்டம் நடத்துகின்றனர். ஒரு புதிய உத்தரவு வரும்பொழுது நிர்வாக ரீதியாக சில தாமதம்  ஏற்படத்தான் செய்யும். இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  ஊதியத்தை, பொறுத்திருந்து பெறுவதற்கான மனநிலை வர வேண்டும். அதைவிடுத்து போராட்டத்தில் இறங்கினால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்பதை பேராசிரியர்கள் உணர வேண்டும். அதேசமயம் சொசைட்டிகளுக்கு மானியம்  கொடுப்பதற்கான  அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளதாக கவர்னர் கிரண்பேடி எடுத்த  நடவடிக்கை  தான், சம்பள தாமதத்துக்கு காரணம் என்பதை ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.காரைக்காலில் காவிரி நீர் ஒரு சில  பகுதிகளுக்கு வந்துள்ளது. முக்கொம்பு அணை உடைப்பு ஏற்பட்டதால் கடைமடை  பகுதியான திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளுக்கே காவிரி நீர் வரவில்லை. தற்போது காரைக்காலில் நாட்டாறில் காவிரி நீர் வந்துள்ளது. அணையில் தற்காலிக சீரமைப்பு பணி காரணமாக இன்னும் இரண்டு நாளில் காவிரி நீர் வரும் என எதிர்பார்க்கிறோம். காவிரி நீர் முறையாக வரும் பட்சத்தில் 6 ஆயிரம் ெஹக்ேடருக்கு மேல் விவசாயம்  நடைபெறும்.

இன்னும் ஒரு சில தினங்களில் காரைக்கால் அறிஞர் அண்ணா  கலைக்கல்லூரியில் கலைஞர் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையம் தொடங்கப்பட  இருக்கிறது. அவ்வையார் மகளிர் கல்லூரி விரிவுபடுத்தப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். காஞ்சி  மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் 500  மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. கல்லூரிகளில் புதிய  முறையாக மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியரின் செயல்திறன் ஆகியவற்றை கண்காணிக்க மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாணவர் வகுப்பறைக்கு வந்தாரா,  இல்லையா என்பது பெற்றோருக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும். மாணவர்கள் காலையில் கல்லூரிக்கு வந்து விட்டு இடையில் சென்று விட்டாலும்  தெரிந்து விடும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தகவல் இணையத்தில்  தெரிவிக்கப்படும். மாணவர்கள் கட் அடித்து விட்டு வெளியில் சுற்றினால் உடனே  பெற்றோருக்கு தகவல் செல்லும். இது ஒரு சில வாரங்களில் கல்லூரிகளில்  அமல்படுத்தப்பட உள்ளது.

கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில்  1960ம் ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த மென்டர் சிஸ்டம் மீண்டும்  நடைமுறைக்கு வர உள்ளது.  அதன்படி பத்து மாணவரை ஒரு ஆசிரியர் தத்தெடுத்து  கொள்ள வேண்டும். அவர்களின் குடும்ப பின்னணி, அவருடைய வருகை, அவருடைய  கற்கும் திறன் ஆகியவற்றுக்கு அவர் தான் பொறுப்பு. வீட்டில் பெற்றோர் எப்படி  இருப்பாரோ அதேபோன்று அவர் இருப்பார். மாணவருக்கு தேவையானவற்றை அவர் செய்து  தருவார். இந்த ஆசிரியர் பெற்றோரின் மொபைல் எண்ணை பரிமாறிக் கொண்டு  அடிக்கடி பெற்றோரை சந்தித்து பேசுவார்.  இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் ஒரு  குறிப்பிட தகுந்த மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: