வார சந்தையை கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும்

திண்டிவனம், செப். 21: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் நடக்கும் வாரசந்தை பழமை வாய்ந்ததாகும். இந்த சந்தையின் மூலம் அருகில் உள்ள மயிலம், வீடூர், பெரியதச்சூர், தென்பசியார், ரெட்டணை என 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுகின்றனர். அதே போல் அந்த வழியாக கார்களில் வெளியூர் செல்பவர்களும் வாகனங்களை நிறுத்தி பொருட்களை வாங்கி செல்கின்றனர். இங்கு வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் சந்தை நடப்பதால் ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்க வருகின்றனர். வெட்ட வெளியில் சந்தை நடந்து வருவதால், இங்கு வியாபாரிகள், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், மின் விளக்கு வசதிகள் இல்லை. இதையடுத்து கடந்த 2007-08ம் ஆண்டில் ஆரணி தொகுதியின் எம்.பி.,யாக இருந்த கிருஷ்ணசாமியின் பரிந்துரையின் பேரில் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் செலவில் குடிநீர் டேங்க், மின் வசதியுடன் கடைகள் கட்டப்பட்டது. மேடான பகுதியில் இந்த புதிய சந்தை கட்டிடம் அமைந்துள்ளதால் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்காது.

மேலும் அருகில் ஏராளமான அளவு புறம்போக்கு நிலம் உள்ளதால் தற்காலிக கடைகள் போட ஏதுவாக இருக்கும். ஆனால் கடைகள் இன்னும் கட்டிடத்துக்கு மாற்றப்படாமல் வெட்ட வெளியிலேயே நடந்து வருகிறது. இதனால் மழை காலங்களில் இரண்டு பகுதியிலும் உள்ள கடைகளுக்கு இடையே நடந்து செல்ல மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் மழை நீர் குட்டையாக தேங்கியுள்ளதால், காய்கறி கழிவுகளை அங்கேயே கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இது போல் சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் நிறுத்துவதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட வார சந்தை கட்டிடம் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, புதிதாக கட்டப்பட்ட வளாகத்தில் வார சந்தையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: