கறி கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்த கோரி போராட்டம்

விழுப்புரம், செப். 21: தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். முருகையன், பாக்கியராஜ், பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூபாலன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இளவரசன் நன்றி கூறினார்.கூட்டத்துக்கு பின் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் 5 ஆண்டுகளாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூலி உயர்வுகோரி அமைச்சரை சந்திக்க உள்ளோம். கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் சென்னையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமும், அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டமும் நடைபெறும் என்றார். கூட்டத்தில், நிறுவனங்கள் உடனடியாக கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்த வேண்டும். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மாநில அரசு உடனடியாக குழு அமைக்க வேண்டும். கறிக்கோழி வளர்ப்பு தொழிலை விவசாய தொழிலாக அறிவிக்க வேண்டும். மின்கட்டண சலுகை வழங்க வேண்டும், என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: