குடும்பத்துடன் தொழிலாளர்கள் மறியல்

விழுப்புரம், செப். 21: மணல் அள்ள அனுமதிக்க கோரி விழுப்புரத்தில் குடும்பத்தினருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகாவில் திருப்பாச்சனூர், காவணிப்பாக்கம், அரசமங்கலம், பிடாகம், பேரங்கியூர், தளவானூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரம் மாட்டு வண்டிதொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் கட்டுமானப் பணிகளுக்கு மணல் ஏற்றி விற்பனை செய்து வந்தனர். தற்போது அரசு குவாரிகள் மூடப்பட்ட நிலையில், மணல் அள்ளமுடியாமல் மாடுகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மணல் அள்ள அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மணல் அள்ளி வரும் மாட்டுவண்டி உரிமையாளர்களிடம் கெடுபிடியாக நடந்து கொள்ளும் காவல்துறையை கண்டித்தும், மணல் அள்ள அனுமதிக்கக் கோரியும் நேற்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பானாம்பட்டு சாலையில் மாட்டு வண்டிகளுடன் வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த நகர காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சுமார் அரை மணி நேரம் நடந்த மறியல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: