சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து ஒப்பாரி வைத்து மக்கள் நூதன போராட்டம் ஆம்பூர் அருகே பரபரப்பு

ஆம்பூர், செப். 21: ஆம்பூர் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது பெருமாள்புரம் வெங்கடசமுத்திரம் காலனி. இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் நீர்வழி புறம்போக்கு கால்வாய் அருகே சுடுகாடு இடமாக பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தனியார் ஒருவர், அந்த இடங்களை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் மற்றும் கழிவறைகளை கட்டியுள்ளார். இதுகுறித்து அப்பகுதியினர் ஆம்பூர் தாலுகா அலுவலகம், பேரணாம்பட்டு ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தனர்.அதன்பேரில், சுடுகாட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆம்பூர் தாசில்தார் சுஜாதா, பேரணாம்பட்டு பிடிஓவுக்கு உத்தரவிட்டார். இருப்பினும் அப்பகுதியில் தொடர்ந்து கட்டுமான பணி நடந்து வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த ஒருவருக்கு, சடங்கு செய்வதற்காக அவரது உறவினர் நேற்று காலை சுடுகாட்டிற்கு சென்றனர். அப்போது அவரது சடலம் புதைக்கப்பட்ட இடம் மூடப்பட்டு அதன் மேல் சிறுபாலம் ஒன்று கட்டப்பட்டு வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். மேலும், பாலத்தின் ஒரு பகுதியில் மூடப்பட்டு இருந்த கல்லறை சீர் செய்து பூஜை செய்து, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தகவலறிந்த பேரணாம்பட்டு பிடிஓ கலைசெல்வி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்ைக எடுப்பதாக உறுத்தியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: