2012ம் ஆண்டு சொத்து மதிப்பு சான்று வழங்க ₹1,000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 4 ஆண்டு சிறை வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு

வேலூர், செப்.21: 2012ம் ஆண்டு சொத்து மதிப்பு சான்று வழங்க ₹1,000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. வேலூர் அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் சுகுமார்(52). இவர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி சொத்து மதிப்பு சான்று பெறுவதற்காக வேலூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது துணை தாசில்தாராக இருந்த ராமலிங்கம்(52) சான்று வழங்க தனக்கு ₹500யும், வரவேற்பு தாசில்தாராக இருந்த பாலமுருகனுக்கு ₹500யும் லஞ்சம் பெற்றார்.இதுகுறித்து தகவலறிந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினிகாந்த் ஆகியோர் வழக்குப்பதிந்து ராமலிங்கத்தை கைது செய்தனர். இதையடுத்து துணை தாசில்தார் ராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதுதொடர்பான வழக்கு வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி பாரி விசாரித்து துணை தாசில்தார் ராமலிங்கத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

Related Stories: