ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு பஸ்சை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியல்

ஆம்பூர், செப்.21; ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியாக வந்த தனியார் பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது மேல்சாணாங்குப்பம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், பாண்டிச்சேரி, அம்பேத்கார் நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.கடந்த மூன்று மாதங்களாக இந்த கிராமங்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் இல்லை என்று கூறி ஊராட்சி நிர்வாகத்திடமும், பேரணாம்பட்டு ஒன்றிய அலுவலகத்திலும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.ஆனால், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் நேற்று காலை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், காலி குடங்களுடன் வாணியம்பாடி, உம்ராபாத் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியாக வந்த தனியார் பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த உம்ராபாத் போலீசார் மற்றும் பேரணாம்பட்டு பிடிஓ பாரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: