கண்காணிப்பில் அலட்சியம் காட்டினால் நடவடிக்கை மின்வாரிய ஊழியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

வேலூர், செப்.21: மின்வாரியத்தில் மாற்றியமைக்கப்படும் பழுதான பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், கண்காணிப்பில் அலட்சியம் காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தமிழக மின்சார வாரியத்தில் மின்சார சாதனங்கள் பழுதானால் அதனை மாற்றினால், பழுதடைந்த பொருட்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதேபோல், மின்சார பழுது கண்காணிப்பில் அலட்சியம் காட்டினால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:பெரும்பாலான மின்விபத்துகள் அலட்சியம் காரணமாகவே நடக்கிறது. எனவே, மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் உடனடியாக சீரமைக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும். மேலும் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் மத்தியில் அந்தந்த அலுவலகங்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். மழைக்காலம் தொடங்க உள்ளதால், ஆங்காங்கே ஏற்படும் பிரச்னைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

பேரிடர் காலத்தில், பொதுமக்கள் புகாரை பெறுவதற்கு அதிகாரிகள் செல்போனை கட்டாயம் எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், வீடுகளுக்கு நேரடியாக சென்றும் அவசர கால செல்போன் எண்களை வழங்கலாம். மேலும் பொதுமக்கள் அளிக்கும் மின்பழுது சம்பந்தமான புகார்களை முறையாக ஆவணங்களில் பதிவு செய்வது அவசியம். அதோடு, பழுது சரிசெய்யப்பட்டதற்கான அறிக்கையை உடனடியாக அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். மின்விபத்து ஏற்படும் பகுதியில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அலட்சியமாக செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பழுதான பொருட்களுக்கு பதில் மாற்று பொருட்கள் பொருத்தப்பட்டதும், பழுதான பொருட்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

Related Stories: