×

முக்கொம்பில் இருந்து இன்று முதல் கடைமடை பகுதிக்கு செல்ல வினாடிக்கு 200 கனஅடி கூடுதலாக தண்ணீர் திறப்பு கலெக்டர் தகவல்

திருச்சி, செப்.19:  திருச்சி முக்கொம்பில் இருந்து இன்று முதல் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல வினாடிக்கு 200 கனஅடி கூடுதலாக திறந்து விடப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை சிறப்பு கொலு கண்காட்சியை துவக்கி வைத்தபின் கலெக்டர் ராஜாமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சம்பா சாகுபடிக்கு விவசாயிகளுக்கு உரிய முறையில் அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடைமடை பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு இன்னும் எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை பொதுப்பணித்துறையினர் மூலம் கண்காணித்து வருகின்றனர். முக்கொம்பு கொள்ளிடம் மதகுகள் தற்காலிக பராமரிப்பு பணிகள்  முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. மதகுகளை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

 வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முக்கொம்பு கொள்ளிடம் மதகுகள் பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து உரிய முறைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முக்கொம்பு கொள்ளிடம் மதகுகள் பற்றி பொதுமக்கள் எந்தவித அச்சமோ, பயப்படவோ தேவையில்லை. முக்கொம்பில் இருந்து வினாடிக்கு 20,152 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அய்யன் வாய்க்கால், பெருவளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களுக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நாளை(இன்று) முதல் அய்யன் வாய்க்கால், பெருவளை வாய்க்கால், புள்ளம்பாடி ஆகிய வாய்க்கால்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வினாடிக்கு 200 கனஅடி கூடுதலாக திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளது. முக்கொம்பு கொள்ளிடம் புதிய கதவணை ரூ.410 கோடியில் கட்டுவதற்கான பூர்வாங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்ப அறிஞர்கள் பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர்கள் இரவு பகலாக ஆய்வு செய்து மிகவிரைவில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி விரைவில் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Tags :
× RELATED நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு...