கலிங்கப்பட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

மணப்பாறை, செப்.19:  மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டியில் வட்ட சட்டப்பணிகள் குழு நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், தலைமை குற்றவியல் நடுவருமாகிய சத்யாதாரா  தலைமை வகித்து பேசுகையில், பொதுமக்களுக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்னையாய் இருந்தாலும் சட்ட உதவி மையம் மூலம் தீர்த்து வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 2 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாவட்ட நீதிமன்றம் மற்றும் கிழமை நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.  

நீண்ட நாட்களாக இருக்கும் வழக்குகளை இருதரப்பினரையும் வரவழைத்து சமாதானம் பேசி அந்த வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. மக்கள் நீதிமன்றத்தில் விட்டுக்கொடுத்து சமரச முறையில் முடிக்கப்படும் வழக்குகளை மேல்முறையீடு செய்யத் தேவையில்லை. மேல்முறையீடு செய்ய இயலாது என்றார். இதனையடுத்து மணப்பாறை வக்கீல்கள் சங்கத் தலைவர் செங்குட்டுவன், மூத்த வக்கீல் முல்லை ஆறுமுகம் ஆகியோர் சட்ட விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கலையரசி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவகாமசுந்தரி மற்றும் மணப்பாறை நீதித்துறை நடுவர் தர்மபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பொதுமக்களிடமிருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. வக்கீல் குழந்தைவேல் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மணப்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக அலுவலர் கலைவாணன் செய்திருந்தார்.

Related Stories: