கும்பகோணத்தில் முதன் முறையாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம்

கும்பகோணம், செப். 19:  கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முதன்முறையாக எள் ஏலம் நேற்று நடந்தது. இதில் வெளிச்சந்தையை விட கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயி மகிழ்ச்சியடைந்தார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி, உளுந்து, நிலக்கடலை ஆகியவை ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முதன்முறையாக எள் ஏலம் நடந்தது. மாவட்ட விற்பனைக்குழு செயலாளர்  சுரேஷ்பாபு தலைமை வகித்தார். கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன், 200 கிலோ  எள்ளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தார். இதையடுத்து கும்பகோணத்தில் இருந்து வந்திருந்த வியாபாரி ஏலம் எடுத்தார். அதில் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக  ரூ.9,600, குறைந்தபட்சம் ரூ.9550 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதுகுறித்து கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்  பிரியாமாலினி கூறுகையில், கும்பகோணத்தில் உள்ள விற்பனை கூடத்தில் இதுவரை பருத்தி, உளுந்து, நிலக்கடலை ஏலம் நடந்துள்ளது. தற்போது முதன்முறையாக எள் ஏலம் விடப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் ஒரு குவிண்டால் ரூ.7,500 முதல் ரூ.8,000 வரை விற்பனையாகிறது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வரப்பட்ட எள் ரூ.9,600 வரை விலை போனதால் விவசாயிக்கு கூடுதல் தொகை கிடைத்துள்ளது.

விவசாயிகள் எள் கொண்டு வந்தால் தொடர்ந்து வாரவாரம் மறைமுக ஏலம் விடப்படும் என்றார்.

Related Stories: