சளியை அறுக்கும் தூதுவளைக் கீரை

நன்றி குங்குமம் டாக்டர்

தூதுவளையானது இந்தியாவில் எங்கும் பயிராகும் ஒரு வகைக் கொடி. இதில் சிறு முட்கள் காணப்படும். இதன் வேர், காய், இலை, பூ என அனைத்தும் மருத்துவ பயன்கள் உடையது.  இதில் ஊதா நிறப் பூக்கள் உடையது மற்றும் வெள்ளை நிறப் பூக்கள் உடையது என்று இரு முக்கிய வகைகள் உள்ளன.இது தூதுவளை, அளர்க்கம், சிங்கவல்லி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இது உணவு (தூதுவளை ரசம், தூதுவளை அடை, துவையல் சட்னி, சூப்) மற்றும் மருந்துகளில் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் காயகற்பமாகவும் பயன்படுகிறது. காயகற்பம் - காயம் என்பது உடல்; கற்பம் என்பது உடலைக் கல்போல் ஆக்குவது (உடம்பினை நோயில்லாதபடி நன்னிலையில் வைத்திருந்து பிணிகளை நீக்குவது). தூதுவளையின் பொதுக் குணங்கள் பற்றி தேரையர், குணவாகடம் என்னும் நூலில் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘தூது பத்திரி யூண்சுவை யாக்கும்பூ

தாது வைத்தழைப் பித்திடும் காயது

வாத பித்தக பத்தையு மாற்றுவேர்

ஓதும் வல்லிபன் நோயுமோ ழிக்குமே’

தூதுவளை இலை உணவுக்குச் சுவை தரும். இதன் பூ - ஆண்மையைப் பெருக்கும். இதன் காய் - முக்குற்றங்களையும் வாதம், பித்தம், கபம் நீக்கும். இதன் வேரும், கொடியும் இருமல், இரைப்பு முதலிய ஐயப்பணிகளைப் போக்கும்.

‘தூதுவே ளையையுணத் தொக்கினிற் றொக்கிய

வேலையை நோயெலா மெய்யைவிட் டகலுமே‘

- தேரையர்

தூதுவேளையை கற்பமுறையாகவேனும் கறியாகவேனும் உட்கொண்டு வர, உடலில் ஐயத்தால் ஏற்பட்ட நோய்கள் யாவும் நீங்கும்.

தூதுவேளைக் கற்பம்

‘திருக்குளத்தை நன்றாக்கித் தின்னுவையே னல்ல

திருக்குளத்தை போலே திருந்துந் - திருக்குளத்தை

யெல்லாமிரவு வினை யென்ன வருந் தூதுவளை

யெல்லா மிரவுமினி யென்‘

                                             - தேரையர் யமக வெண்பா

தூதுவளைக் கீரை, வேர், காய், வத்தல், ஊறுகாய் இவற்றில் ஏதாவது ஒன்றை நாற்பது நாட்கள் புசித்துவர கண்ணில் ஏற்பட்ட தீக்குற்ற மிகுதி, கண்ணில் உண்டாகும் பித்தநீர் மற்றும் மற்ற கண் நோய்கள் யாவும் நீங்கும்.100 கிராம் தூதுவளையில், புரதம் 5.5 கிராம், கார்போஹைட்ரேட் 25 கிராம், நார்ச்சத்து 3.3 கிராம், சோடியம் 28 மில்லி கிராம், பொட்டாசியம் 0.73 மில்லி கிராம், பாஸ்பரஸ் 0.02 மில்லி கிராம், கால்சியம் 60 மில்லி கிராம், மக்னீசியம் 194 மில்லிகிராம், இரும்புச்சத்து 0.34 மில்லி கிராம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன.

தூதுவளை இலையில் கால்சியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே, தினமும் அல்லது வாரம் இரு முறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படும்.

தூதுவளை இலையைப் பறித்து சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு அல்லது வத்தல் சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் நுரையீரல் தொடர்பான நோய்கள் (சளி, இருமல், இரைப்பு) நீங்கி உடலுக்கு வலுவைச் சேர்க்கும்.தூதுவளைக் கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நசுக்கி, அதன் சாறை கொதிக்க வைத்து அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து சூப்பாக அருந்தினால் சளி, இருமல் குறையும். நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

மூச்சுவிட சிரமமாக இருந்தால், ஒரு கைப்பிடி தூதுவளை இலைகளுடன், 10 சின்ன வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெயில் நன்கு வதக்கி வைத்துக்கொண்டு அதில் ஒரு வேளைக்கு - சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து இருவேளை சாப்பிட மூச்சு விடுவதில் உண்டாகும் சிரமம் குறையும்.ஆஸ்துமா நோயாளிகள் (பெரியவர்கள்) தாம்பூலத்தில் வெற்றிலையுடன் தூதுவளை இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர்கள் வீட்டிலேயே செடியை நட்டு வைத்துக் கொண்டு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

தூதுவளையை அரைத்து கீரை அடைப் போல செய்து சாப்பிட்டு வந்தால், தலையில் தங்கும் கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல், பெருவயிறு, மந்தம், உடல் குத்தல் நீங்கும். உடல் வன்மை பெறும். ஆண்மை பெருகும்.தூதுவளையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு சளி, இருமல் நேரங்களில் ஒரு ஸ்பூன் பொடி எடுத்து தேனில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட சளி, இருமல் தீரும். நோய் எதிர்ப்புச் சக்தியும் பெருகும்.

வயிறு மந்தம், வயிறு கோளாறு இருப்பவர்கள், வாயுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் காலை அரை டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தூதுவளைப் பொடியை கலந்து குடித்து வந்தால் வயிறு பிரச்சனைகள் குணமாகும்.தூதுவளை இலைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து கஷாயமாக அருந்த சுரம் நீங்கும்.தூதுவளை இலைகளை நெய்யோடு சேர்த்து காய்ச்சி எடுத்த நெய்யை, மருந்தாக கொடுத்து வர சளி, இருமல் நோய்கள் தீரும்.இதன் இலைகளைப் பிழிந்து காதில் விட காதடைப்பு, காதெழுச்சி போகும்.

தூதுவளை மலர்களை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுப்பெறும். உடல் பெருக்கம், பெண் வசியம் உண்டாகும்.தூதுவளைக் காயைப் பறித்து மோரில் ஊற வைத்து வற்றலாக்கி உண்டுவர வாத நோய், பித்தநோய், காபநோய்கள் முதலியன அணுகாது. தூதுவளைப் பழங்களை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் மலச்சிக்கல் போகும். மார்புச் சளி, இருமல், முக்குற்றங்கள், நீரேற்றம் போகும். பாம்பு நஞ்சு தீரும்.

தொகுப்பு : திலீபன் புகழ்

Related Stories: