×

தண்ணீர் பற்றாக்குறையால் சுகாதார வளாகத்திற்கு பூட்டு

ஆர்.எஸ்.மங்கலம், செப். 19:  ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி கிராமத்தில் பயன்பாடற்ற நிலையில் பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சனவேலி ஊராட்சியில் பொதுமக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வளாகம் பல லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டதன் நோக்கம் என்ன என்றால், பொதுமக்கள் திறந்த வெளிகளில் மலம் கழிக்கக் கூடாது என்பதுதான். ஆனால் அதற்கு மாறாக சுமார் 1 ஆண்டு காலமாகவே சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பெண்கள் முதல் குழந்தைகள் வரை திறந்த வெளியிலே மலம் கழிக்க வேண்டிய அவலம் உள்ளது.

இந்த வளாகம் சம்மந்தமாக உள்ளாட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர். இப்பகுதி மக்கள் கூறுவது, எங்கள் ஊரில் சுகாதார வளாகம் கட்டியதும் நாங்கள் எல்லோரும் மிகுந்த சந்தோசத்தில் இருந்தோம். இனிமேல்நாம திறந்த வெளியில் மலம் கழிக்க தேவையில்லை என்றும், நமக்கு நோய் தொற்றுக்கள்ஏற்படாது என்று இருந்தோம். ஆனால் அது நிறைவேறவில்லை. கொஞ்ச காலத்தில் தண்ணீர் வசதி இல்லை என்று சாக்கு சொல்லி சுகாதார வளாகத்திற்கு ஊராட்சி நிர்வாகம் பூட்டு போட்டு விட்டார்கள். ஆனால் அந்த மதில் சுவரில் திறந்த வெளியில் மலம் கழிக்காதீர்கள் என்று வாசகம் எழுதி வைத்து விட்டு கழிவறையில் பூட்டு போட்டுள்ளது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் விரைவில்இந்த சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டு கொண்டு வர வேண்டும் என்று கூறி கோரிக்கையும் வைத்துள்ளனர்.

பிடிஓ பச்சம்மாளிடம் கேட்டபோது, சுகாதார வளாகம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பூட்டப்பட்டுள்ளது. தற்சமயம் அதற்கு ஆழ்குழாய் போர்வெல் போட்டு இணைப்பு கொடுப்பதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் தண்ணீர் வசதி செய்து கொடுத்து சுகாதார வளாகம்திறக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை