×

ராமநாதபுரம், மண்டபம் பகுதி வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு பயிற்சி வன உயிரின காப்பாளர் தகவல்

ராமநாதபுரம், செப்.19: ராமநாதபுரம், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சி நடந்து வருவதாக வன உயிரினக் காப்பாளர் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார் கூறுகையில், ராமநாதபுரம், கீழக்கரை, தூத்துக்குடி, மண்டபம் பகுதிகளை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா பகுதிகளில் மொத்தம் 63 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் கீழக்கரை, தூத்துக்குடியில் பணியாற்றுவோரில் 5 பேருக்கு இம்மாதம் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஸ்கூபா டைவிங் பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இம்மாதம் 24ம் தேதி ஸ்கூபா டைவிங் பயிற்சி துவங்குகிறது. இதற்காக தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை ரூ.3.5 லட்சம் நிதி ஒதுக்கியிருப்பதுடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பயிற்சி நிறுவனம் மூலம் இப்பயிற்சியானது வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஸ்கூபா டைவிங் பயிற்சி தெரிந்தவர்கள் கடலுக்கு அடியில் 3 மீ. தூரம் வரை மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது வழங்கப்படும் பயிற்சியானது கடலுக்கு அடியில் 10 மீ. ஆழம் வரை சென்று ஆய்வு செய்ய வசதியாக இருக்கும். இப்பயிற்சி எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கும் முதற்கட்டமாக பாட வகுப்பும், 2வது கட்டமாக நீச்சல் குளத்திலும், 3வது கட்டமாக கடலுக்கு அடியிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின் மூலம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள அரியவகை கடல்வாழ் உயிரினங்களை மிகவும் அருகில் சென்று பார்க்கவும், பாதுகாக்கவும் முடியும் என்று தெரிவித்தார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை