×

அரசு உப்பு நிறுவனம் லாபம் ஈட்டியும் நலிவடையும் தொழிலாளர் குடும்பங்கள் பணி நிரந்தரம் வேண்டும் அடிப்படை வசதியில்லை

சாயல்குடி, ஆக.19: சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் லாபகரமாக இயங்கி வரும் அரசு உப்பளத்தில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின் குடும்பங்கள் நலிவடைந்து வருகின்றன. பணி நிரந்தரம், தொகுப்பு வீடுகள், பள்ளி, பேருந்து வசதி மற்றும் வேலை பார்க்கும் இடத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உப்பள தொழிலாளர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடலாடி ஊராட்சி ஒன்றியம் வாலிநோக்கத்தில் மாரியூர்-வாலிநோக்கம் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனமான, தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. 1974ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம் அமைக்கப்பட்டு, இயற்கை முறையில் அயோடின் கலந்து உப்பு தயாரிக்கப்படுவதால், லாபத்துடன் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் 110க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும், 1,350 ஒப்பந்த பணியாளர்களும், சுமார் 500க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் இந்நிறுவனத்திற்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்துள்ள தனி இயக்குனர் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் உப்பு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், தமிழக அரசிற்கு நல்ல வருவாயை ஈட்டி தருகிறது. அதிகமாக விற்பனை ஆவதால் உப்பின் உற்பத்தி தேவையும் அதிகமாக தேவைப்படுகிறது. இதனால் 2017 ஏப்ரல் மாதத்தில் வாலிநோக்கத்தில் ரூ.5 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் தனியார் தொண்டு நிறுவனமும், தமிழ்நாடு அரசும் இணைந்து புதிய உற்பத்தி அலகு திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இதில் நாள் ஒன்றிற்கு 5 டன் வரை  உப்பு உற்பத்தி செய்யும் சூழ்நிலை அனைத்தும் இருந்தும் கூட இங்கு போதிய அளவு உற்பத்தி செய்யாமல், உற்பத்தி பணிகளை தனியார் சிலருக்கு கொடுப்பதால், அரசிற்கு பல லட்சங்கள் வருவாய் இழப்பீடு ஏற்படுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். லாபத்தில் இயங்கி வரும் இந்நிறுவனத்தில், வேலை பார்த்து வரும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் வாழ்க்கை முறை மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது. இதனால் தினந்தோறும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். உப்பள தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, கடந்த 2014ம் ஆண்டு அரசு ஒப்பந்தபடி, உப்பள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை வழங்கப்பட வில்லை. மாத சம்பளத்தை முதல் வார இறுதிக்குள் வழங்குவது கிடையாது. கடும் வெயிலில் கடல் உப்பு காற்றில், உப்பளத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு அம்ச பொருட்கள், கையுறை, கண்ணாடி, முகமூடி, பாதுகாப்பு உடைகள் போன்றவை வழங்கவில்லை.
பணியாளர்களுக்கு பதவி உயர்வு, ஓய்வு நிதி போன்றவற்றை முறைபடுத்த வில்லை. உப்பளத்தில் நிழற்கூடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது. இவ்வளவு கஷ்டத்தில் வேலை பார்த்து வரும் இத்தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், நாள் ஒன்றிற்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான உப்பு உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்படும். ஆனாலும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு, அரசிற்கு லாபத்தை ஈட்டி தருகின்றனர் என்றனர்.

பாதுகாப்பில்லை.....
உப்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அம்ச பொருட்கள் ஓராண்டாகியும் வழங்கவில்லை. நிர்வாகத்தில் அடிப்படை வசதிகளை கேட்டால், உப்பு வாங்கிய தனியார் நிறுவனங்கள் பணம் தரவேண்டியுள்ளது, அவர்கள் தந்தால் மட்டுமே போதிய வசதிகளை செய்து தரமுடியும் என்கிறார்கள். அரசும் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை. எனவே உப்பளத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள் அவதி
உப்பள தொழிலாளர்கள் சிலர் கூறும்போது, வேலை பார்க்கும் உப்பளத்தில் எவ்வித அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி வேலை பார்த்து வருகிறோம். அரசு கட்டி கொடுத்த தொகுப்பு வீடுகள் பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கிறது, இதனால் தினந்தோறும் சொந்த கிராமங்களுக்குச் சென்று வருவதால், பஸ் வசதியின்றி ஆட்டோக்களுக்கு கூடுதலாக பணம் கொடுத்து சென்று, வருவதால், வாங்கும் கூலி போக்குவரத்திற்கே செலவாகிறது. மேலும்  குழந்தைகளுக்கு பள்ளி, பஸ் வசதியில்லாததால், தனியார் பள்ளி வேன் விடுவதால், பல்வேறு சிரமங்களுடன் தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். இதனால்  பணம் விரயமாகிறது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை