×

ஆட்டோ நிறுத்தத்திற்கு இடம் தர மறுத்ததால் போராட்டம்

கூடலுார், செப்.19:  கூடலூர் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகன போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கள்ளிக்கோட்டை சாலை சந்திப்பு பகுதியில் இருந்து ஊட்டி சாலையில்  ராமகோபாலபுரம் பகுதி வரை, சாலையின் நடுவே புதியதாக சிமென்ட் தடுப்பு அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
 இந்த சாலையில் சிண்டிகேட் வங்கி எதிர்புறம் துவங்கி, விநாயகர் கோவில் வரை மேல் கூடலூர் மற்றும் காமராஜநகர் செல்லும் ஆட்டோ நிறுத்துமிடமாக இருந்து வந்தது. சாலையின் நடுவே சிமெண்ட் தடுப்பு அமைத்ததால் ஆட்டோக்கள் நிறுத்தும் பகுதி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் என கூறி, அங்கு ஆட்டோக்களை நிறுத்த கூடாது என தடைவிதிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து ஆட்டோ  ஓட்டுனர்கள் தரப்பில் கூறுகையில், இப்பகுதியில் ஏற்கனவே இரும்பு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இப்பகுதி குறுகலானது என்பதால், அவ்வப்போது வாகன விபத்துகள் ஏற்படும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க தற்காலிக தடுப்புகளை மாற்றி போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வந்தது. தற்போது நிரந்தர சிமெண்ட் தடுப்பு போடப்பட்டுள்ளதால், சாலையில் போக்குவரத்துக்கு இடம் குறைந்ததோடு, அவசர வேளைகளில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் கூடலூர் செல்லும் பயணிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தனர். ஆர்டிஓ இல்லாததால், காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாத இடத்தில் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டதால் ஆட்டோ டிரைவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு