×

ஊட்டி - மஞ்சூர் சாலையில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அதிகரிப்பு

ஊட்டி, செப். 19: ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் நுந்தளா மட்டம் பஜார் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் தனியார் வாகனங்கள் நிறுத்திக் கொள்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்ட வருகிறது.   ஊட்டியில் இருந்து மஞ்சூர் பகுதிக்கு ஏராளமான அரசு பஸ்கள் உட்பட தனியார் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இச்சாலையில் பெரும்பாலான பகுதிகளில் சாலைேயாரங்களில் வாகனங்கள் நிறுத்திக் கொள்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, நுந்தளா மட்டம் பஜார் பகுதியில் இரு புறங்களிலும் கடைகள் உள்ளன. இந்த கடைகளின் முன்தான் மக்கள் பஸ்சிற்காக காத்து நிற்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், இச்சாலையோரங்களில் இரு புறங்களிலும் தனியார் வாகனங்கள் நிறுத்தி வைத்துக் கொள்கின்றனர். குறிப்பாக, பிக் அப் வேன் (சிறிய லாரிகள்) மற்றும் லாரிகள் நிறுத்தி வைத்துக் கொள்கின்றனர். இதனால், இவ்வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்கள் மிகவும் சிரமப்பட்டே செல்ல வேண்டியுள்ளது. மேலும், இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்திக் கொள்ளும் நிலையில், எதிர் எதிரே வரும் அரசு பஸ்கள் ஒன்றிற்கு ஒன்று இடம் விட்டு செல்ல முடியாமல் ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

 இது போன்ற சமயங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டு தகராறு செய்வதால், வெகு நேரம் பயணிகள் காத்து நிற்க வேண்டியுள்ளது. மேலும், அரசு பஸ் ஓட்டுநர்களும் பாதிக்கின்றனர். நேற்றும் மஞ்சூரில் இருந்து வந்த அரசு பஸ் நுந்தளா மட்டம் பஜார் பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, பின் புறத்தில் இருந்து ஊட்டி நோக்கி வந்த சிறிய லாரி ஒன்று பஸ்சை முந்திச் செல்ல முயற்சிக்கும் போது, பஸ் மீது உரசியது. இதில், அரசு பஸ் லேசாக சேதம் அடைந்தது. லாரி உரிமையாளர்கள் பஸ்சை சீரமைப்பதற்கான தொகையை செலுத்துவதாக உறுதியளித்த பின்னரே அங்கிருந்து பஸ் புறப்பட்டு சென்றது. இதனால், காலதாமதம் ஏற்பட்டது.

 இப்பகுதியில் இரு புறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு இடையே புகுந்து செல்வதற்காக லாரி முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டது. எனவே, இப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடக்காமல் இருக்க நுந்தளா மட்டம் பகுதியில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போலீசார் தடை விதிக்க வேண்டும். ேமலும், காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் நியமிக்கப்பட்டு இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தாமலும், போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்