கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 12,500 பேர் விண்ணப்பம்

கோவை, செப்.19: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இதுவரை 12,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, சூலூர், கவுண்டம்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய பத்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி கலெக்டரால் வௌியிடப்பட்டது.10 சட்டமன்ற தொகுதிகளில் 28,33,509 வாக்காளர்கள் உள்ளனர்.  மாவட்டத்தில் 1.1.2019 தேதியை தகுதிநாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி 1.9.2018 முதல் 31.10.2018 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

 இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதல் தற்போது வரை 18 வயதை பூர்த்தி செய்து, புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல், வாக்காளர் பட்டியலில் ெபயர் நீக்கம் செய்ய 1,100 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள 1,200 பேர் விண்ணப்பித்துள்ளனர். தொகுதிக்குள்ளேயே பெயர் மாற்றம் செய்ய 1,200 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 12,500 பேர் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய வரும் 23ம் தேதி, அக்டோபர் 7ம் தேதி, அக்டோபர் 14ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: