நீர் நிலைகளில் மாசுநீர் கலந்ததால் 17 சாயப்பட்டறைகள் மூடல்

கோவை, செப்.19: கோவை நகரில் அனுமதியின்றி இயங்கிய 17 சாயப்பட்டறை மூடி சீல் வைக்கப்பட்டது.   ேகாவையில் ெபான்னையராஜபுரம், தெலுங்குபாளையம், சொக்கம்புதூர், செல்வபுரம், பேரூர் பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது. இந்த சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் சாயக்கழிவை நொய்யல் ஆறு, குளங்களில் வெளியேற்றி வந்தனர். நீர் மாசு அதிகரிப்பை தொடர்ந்து சாயப்பட்டறைகள் படிப்படியாக மூடப்பட்டு வந்தது.  இந்நிலையில், நகரில், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் தொழில் நுட்பத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு செய்து நீரை மறு சுழற்சி முறையில் பயன்படுத்தி சில நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வந்தது.

சில சாய பட்டறைகள் மறு சுழற்சி செய்யாமல் கழிவு நீரை ஆறு, குளங்களில் விடப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தரப்பட்டது. இதை தொடர்ந்து இந்த மாதத்தில், 12 சாயப்பட்டறைகள் சீல் வைத்து மூடப்பட்டது. வீடு, தோட்டங்களில் ரகசியமாக இயங்கிய 5 சாயப்பட்டறைகளை சமீபத்தில் மாசு கட்டுபாட்டு வாரியத்தினர் மூடி சீல் வைத்தனர். இது தொடர்பாக மாசு கட்டுபாட்டு வாரிய பொறியாளர்கள் கூறுகையில், ‘‘ சொக்கம்புதூரில் சாயப்பட்டறைகளுக்காக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சில சாயப்பட்டறைகளின் மாசு கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. சில ஆண்டாக இந்த சுத்திகரிப்பு நிலையம் இயங்கவில்லை. சிலர் முறைகேடாக 17 சாயப்பட்டறைகளை ரகசியமாக நடத்தி வந்தனர். அனைத்து சாயப்பட்டறைகளும் சீல் வைத்து மூடப்பட்டது.

 கோவை நகரில் சாயப்பட்டறைகள் நடத்துவதற்கான கட்டமைப்பு கிடையாது. ஒரு சாயப்பட்டறைகளுக்கு கூட அனுமதி வழங்கவில்லை. யாராவது சாயப்பட்டறை நடத்தினால் மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். நகரில் பல்வேறு இடங்களில் சாயப்பட்டறை இயங்குகிறதா என அடிக்கடி சோதனை நடத்தி வருகிறோம், ’’ என்றனர்.

Related Stories: