200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஈரோடு, செப். 19: ஈரோட்டில் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான 200 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பொருளை வைத்திருந்த கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தை கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ரத்து செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடையின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படுவதோடு மட்டும் அல்லாமல் தொடர்ந்து விற்பனை செய்து வந்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 இதனைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் 9பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவில் எதிரே உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக ஈரோடு கலெக்டா் கதிரவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சம்பந்தபட்ட கடையில் உரிய சோதனை நடத்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணிக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வந்த பரத் ஏஜென்சி மளிகை கடையில் உணவு பாதுகாப்பு துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் அந்த கடையில் எவ்வித தடை செய்யப்பட்ட பொருட்களும் சிக்கவில்லை.

பின்னர் கடையின் உரிமையாளரான ஈரோடு வீரப்பன் சத்திரம் திலகர் வீதியை சேர்ந்த பரமேஸ்வரனிடம் (46) அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவரது ஏஜென்சிக்கு சொந்தமான பெரியகுட்டை பகுதியில் உள்ள குடோனில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான 200 கிலோ புகையிலை பொருட்கள்  விற்பனைக்காக பண்டல் பண்டலாக இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது.

  இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி கலைவாணி கூறியதாவது: பாரத் ஏஜென்சியின் குடோனில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.2லட்சம் மதிப்பிலான 200கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்துள்ளோம். மேலும் கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தை ரத்து செய்துள்ளோம். இதேபோல் தொடர்ந்து மாவட்டத்தில் சோதனை நடத்தப்படும். இவ்வாறு நியமன அதிகாரி கலைவாணி கூறினார்.

Related Stories: