பயமுறுத்தும் சுகாதாரநிலைய கட்டிடம் : புதிய கட்டிடம் கட்டப்படுமா?

திருமங்கலம், செப்.19: பொன்னமங்கலத்தில் உள்ள துணை சுகாதாரநிலைய கட்டிடம் நாளுக்குநாள் சேதமடைந்து வருகிறது. எனவே புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருமங்கலத்தை அடுத்துள்ள பொன்னமங்கலம் கிராமத்தில் துணை சுகாதாரநிலையம் அமைந்துள்ளது. சாத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட இந்த துணை சுகாதாரநிலையத்தின் கீழ் பொன்னமங்கலம், மேலேந்தல், முத்துபெருமாள்பட்டி, முத்தையாபுரம், வீரம்பட்டி, சித்தாலை, முத்துகிருஷ்ணாபுரம், புங்கன்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு திங்கள்கிழமைகளில் கொசுமருந்து தெளிப்பு, புதன்கிழமைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களுக்கு மருந்துகளும் வழங்கப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இந்த துணை சுகாதாரநிலையத்தின் கட்டிடம் எந்தவித பராமரிப்பும் இன்றி தற்போது சேதமடைந்து வருகிறது. ஜன்னல்கள் உடைந்தும், மேற்கூரை பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்தும் கட்டிடம் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் இங்கு சுகாதார ஊழியர்களும், பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

இது தவிர இரவு வேளையில் துணை சுகாதாரநிலையத்தின் முன்பு அமர்ந்து சமூகவிரோதிகள் மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பணிபுரியும் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே பொன்னமங்கலம் கிராமத்தில் உள்ள பழமையான துணை சுகாதாரநிலையத்தை அகற்றி விட்டு புதியதாக கட்டிடம் கட்டி தர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: