வரப்புகளையும் இனி எந்திரமே வெட்டும் : ஒரு மணிநேரத்திற்கு ரூ.350 வாடகை

அலங்காநல்லூர், செப்.19: வேளாண்மை துறை மூலம் வரப்பு வெட்டும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மணி நேரத்திற்கு ரூ.350 என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயத்தில் தற்போது நெல்அறுவடை, நடவு, களையெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு எந்திரங்கள் உள்ளன. இதேபோல் வரப்பு வெட்டும் எந்திரத்தையும் வேளாண்மை பொறியியல் துறை வடிவமைத்துள்ளது. மதுரை மாவட்ட வேளாண்மைத்துறை மூலம் வரப்பு வெட்டும் இயந்திரம் அறிமுகம் மற்றும் செயல் விளக்க முகாம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நடந்தது. முகாமில் பொறியாளர்கள் சரவணப்பெருமாள், சுரேஷ்டேனியல், உதவிப்பொறியாளர் பரமன் மற்றும் விவசாயிகள் ராமகிருஷ்ணன், ராகவன், பரமேஸ்வரன் உள்ளிட்ட வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள வயல் வரப்புகளை சீரமைக்க முடியும். ஒரு மணி நேரத்திற்கு ரூ.350 வரை செலவு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே வேலையை ஆட்கள் மூலம் செய்தால் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய நேரிடும். தற்போதைய சூழ்நிலையில் வேலையாட்கள் பற்றாக்குறையால் அதிகப்படியாக கூலி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்த்திடும் வகையில் வேளாண்மை துறை இதுபோன்ற இயந்திரங்களை அறிமுகப்படுத்துவது விவசாயப் புரட்சியின் ஒரு அங்கமாக விளங்கும்’’ என்றனர்.

Related Stories: