தாமிரபரணி படித்துறைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? -அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை, செப். 19: தாமிரபரணி படித்துறைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து, பொதுப்பணித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு பாய்கிறது. இதன் தடத்தில் ஏராளமான பழமையான மண்டபங்கள், பாரம்பரியமிக்க படித்துறைகள் உள்ளன. ஆனால், தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. பல இடங்களில் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் வீணாகும் நிலை உள்ளது. விரைவில் தாமிரபணி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகா புஷ்கர விழா நடக்க உள்ளது. எனவே, தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதையும், கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர், பழமையான படித்துறைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இதற்கான பணிகளை மேற்கொள்ள எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்து பொதுப்பணித்துறை செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: