×

மெத்தனம், நிர்வாக சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் தமிழகம் : திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு

திண்டுக்கல், செப். 19: பாஜவின் அடிமை அரசாக செயல்பட்டு மெத்தனம், நிர்வாக சீர்கேட்டில் தமிழகம் சிக்கி தவித்து வருகிறது என்று திண்டுக்கல்லில் திமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக அரசு செய்து வரும் ஊழல்களைக் கண்டித்தும், முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஆட்சியாளர்கள் பதவிவிலகக் கோரியும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்படி திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் ராஜப்பா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்களும், எம்எல்ஏக்களுமான அர.சக்கரபாணி, இபெ.செந்தில்குமார், எம்எல்ஏ ஆண்டிஅம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், அவைத் தலைவர் பஷீர்அகமது, தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், துணைச் செயலாளர் நாகராஜன், தண்டபாணி, ஒன்றியச் செயலாளர் செழியன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பேசியதாவது: இனி இந்தளவு ஊழல் செய்யவே முடியாது என்றளவிற்கு அதிமுக முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. மெத்தனம், நிர்வாகச்சீர்கேட்டில் தமிழகம் சிக்கி தவித்து வருகிறது. பாதுகாப்பு, அமைதியான வாழ்க்கை என்பதற்கு தமிழகத்தில் அர்த்தமில்லாத நிலை உள்ளது. அடிப்படை தேவையான தண்ணீரைக் கூட விலைக்கு விற்கும் நிலைக்கு இந்த அரசு சென்று விட்டது.எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்கள் தமிழகம் முழுவதும் உள்ள பணிகளை கான்ட்ராக்டர் எடுத்து செய்து வருகின்றனர். ஒவ்வொரு பணியிலும் 40 சதவீதத்திற்கும் மேல் கமிஷன் பெற்றுக் கொள்கின்றனர். இதனால் தரமற்ற பணிகளாகவே உள்ளன. கஞ்சநாயக்கன்பட்டி-அமரபூண்டி பகுதியில் ரூ.40 லட்சத்தில் போடப்பட்ட ரோடு நான்கு நாளில் பெயர்ந்து விட்டது. பாஜகவின் அடிமை அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை, குடிமராமத்துப்பணி என்று அனைத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளதால் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அதிமுக அமைச்சர்கள் மீது எந்த வழக்குப் போட்டாலும் வெற்றி பெறும் அளவிற்கு ஊழலில் திளைத்து வருகின்றனர். இவ்வாறு பேசினர்.தொடர்ந்து தமிழக அரசின் முறைகேடுகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டன.




Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்