தமிழக குவாரிகளில் இருந்து புதுச்சேரிக்கு மணல்

புதுச்சேரி,  செப். 19:  கர்நாடகா மாநிலம்  பெங்களூரில் 28வது தென்மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. உள்துறை அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட  மாநிலங்களில் இருந்து முதல்வர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.  இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசுகையில், புதுச்சேரியில் மணல்தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. புதுச்சேரியில் மணல் இல்லாததால், கட்டுமானத்துக்கு அண்டை மாநிலமான தமிழகத்தை நம்பி உள்ளோம்.  அதே நேரத்தில் தமிழக- புதுவை எல்லையில் இரண்டாயிரம் விளாகம், சுத்துக்கேணி உள்ளிட்ட பகுதிகளில்  அரசு சார்பில் தடுப்பணைகளை கட்டி  வருகிறோம். இதன் காரணமாக வெள்ளக்காலங்களில் அடித்து வரப்படும் மணல் புதுச்சேரிக்குள் வருவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டு விடும். அதே நேரத்தில் தடுப்பணை மூலம்  தமிழக, புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயரும். இரண்டு மாநில மக்களும் பயனடைவார்கள். தமிழக தென்பெண்ணையாற்று பகுதிகளில் செயல்படும் மணல் குவாரிகளில் புதுச்சேரிக்கும் மணலை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக குவாரிகளில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு மணலை கொண்டு செல்ல தடையாக இருக்கும் தமிழக கனிம விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இது தொடர்பாக தமிழக மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த கூட்டத்தில் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை.  மணல் கிடைக்காததால் பிரதமந்திரி வீடுகட்டும் திட்டம், கழிவறை, அரசு அலுவலகங்கள், மேம்பாலங்கள்,  வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கபட்டுள்ளது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள கட்டுமான தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பின்றி உள்ளனர்.

 மத்திய நீர்வளத்துரை கோதாவரி- காவேரி நதிகளை இணைக்கும் திட்டங்களை புதுச்சேரி வரவேற்கிறது. அதே போன்று மாநிலங்களுக்குள்ளாக ஓடும் நதியான தென்பெண்ணையாறு மற்றும் சங்கராபரணி ஆற்றுடன் இணைக்க வேண்டும்.  புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் கடந்த 2007ம் ஆண்டு தனிக்கணக்கு துவங்கப்பட்டு வெளிமார்க்கெட்டில் கடன் பெற்று வருகிறோம். ஜிஎஸ்டியை அமல்படுத்திய போதும், புதுச்சேரியை ஒரு மாநிலமாககருதியே சேர்த்துள்ளனர். எனவே புதுச்சேரியை 15வது நிதி கமிஷனில் உடனடியாக சேர்க்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்: மேலும், முதல்வர் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்யும் வகையில் மணலை கொண்டு செல்லுதல், சேமித்து வைத்தல் குறித்து விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை அமல்படுத்தவும், காரைக்கால், புதுச்சேரி துறைமுகத்தில் மணலை இறக்குமதி செய்யவும் சுற்றுச்சூழல் தடையில்லா சான்றினை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.  புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஒரு ஆண்டுக்கு 1 மில்லியன் மெட்ரி டன் இறக்குமதி செய்ய முதல்கட்டமாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இறக்குமதி மணலை சோதிக்கும் வகையில் தமிழகம் அருகே ஆய்வகம் அமைக்க மத்திய அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும்.  அதேபோல்  விழுப்புரம் மாவட்டம் வீடுர் அணையில் இருந்து புதுச்சேரியின் காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி, தேத்தாம்பாக்கம் ஆகிய ஏரிகள் நீரை பெற்று வந்தன. 1964ம் ஆண்டு தமிழக- புதுச்சேரி இடையே வீடூர் அணை நீர் பங்கீடு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தப்படி புதுச்சேரிக்கான தண்ணீரை விடுவிக்க வேண்டும். நீர்வழி போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும்:  காவிரியில் புதுச்சேரிக்கான 7 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்காலில் திருமலைராஜன் ஆறு, அரசலாறு, நூலாறு, வாஞ்சூர், நாட்டார், நண்டலாறு, பிரவிடையான் ஆறு ஆகிய ஆறுகளில் செல்லும் காவிரி நீர் தொழிற்சாலை, விவசாயம், குடிதண்ணீர் ஆகியவற்றுக்கு மக்கள் அதிகமாக நம்பியுள்ளனர்.  ஆனாம் மேலே இருக்கும் மாநிலமான கர்நாடக மற்றும் தமிழ்நாடு காரைக்கால் பகுதியின் அவலநிலையை மனதில் கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க தண்ணீர் வழங்க வேண்டும். நீர்வழி போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாயை புதுச்சேரிவரை புனரமைக்க வேண்டும்.

Related Stories: