அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள் திடீர் சாலை மறியல்

திருபுவனை, செப். 19:    மதகடிப்பட்டு அருகே காமராஜர் கலைக்கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

 புதுவை மாநிலம் திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பத்தில் காமராஜர் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு முதலாண்டு பட்டப்படிப்பில் 260 இடங்கள் காலியிடமாக அறிவிக்கப்பட்டது. இதில் சென்டாக் மூலம் 3 கட்டமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு 225 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 4ம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டு மீதமுள்ள 35 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான சேர்க்கை நேற்று நடைபெற்றது. ஆனால் 95 மாணவர்கள் வந்திருந்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் இவர்களுக்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து மாணவர்கள் தங்களை கல்லூரியில் சேர்க்க வேண்டும் எனக்கூறி கல்லூரி வளாகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கல்லூரி எதிரே மதகடிப்பட்டு- திருக்கனூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பெற்றோரும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மாணவர்களை அழைத்துச்சென்று கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அப்போது கல்லூரி நிர்வாகத்தினர், ஏற்கனவே காலியாக உள்ள 35 இடங்களில் மட்டுமே மாணவர்களை சேர்க்க முடியும், அதற்கு அதிகமாக சேர்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதைக்கேட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சென்டாக் நிர்வாக அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், மாணவர்களின் பிரச்னையை தெரிவித்தார். இதையடுத்து புதுவை முழுவதும் உள்ள கல்லூரிகளில் காலியிடம் கண்டறியப்பட்டு மீதமுள்ளவர்களுக்கு இடம் வழங்கப்படும் என சென்டாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாணவர்களை சென்டாக் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததையடுத்து அவர்கள் சென்டாக் அலுவலகம் சென்றுள்ளனர். மாணவர்கள் சாலைமறியல் போராட்டம் காரணமாக மதகடிப்பட்டு பகுதியில் நேற்று மதியம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: