பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு

பாகூர், செப். 19:  கிருமாம்பாக்கம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் உள்ள பலருக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. விட்டு விட்டு காய்ச்சல் அடிப்பதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் காய்ச்சல் நிற்பதில்லை. வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் மற்றவர்களுக்கும் பரவி விடுகிறது. அப்பகுதியை சேர்ந்த கலிவரதன், சரண், ரேவதி, வெங்கடேசன், வினோதா, சுதா, அரிகிருஷ்ணன், கிருஷ்ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் முதல் முதியர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் வாந்தி, பேதியால் அவதிப்படுகின்றனர். கை, கால் குடைச்சல் கடுமையான உடல் வலி இருப்பதால் சிக்கன் குன்யாவாக இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

 இதையடுத்து கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்ைத சேர்ந்த டாக்டர்கள் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். அங்குள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் மாதிரி மற்றும் காய்ச்சல் பாதிப்பு கண்ட நோயாளிகளின் ரத்த மாதிரி ஆகியவற்றை சேகரித்து பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரகுநாத் உள்ளிட்டோர் நேரில் வந்து நோயாளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காய்ச்சல் ஏற்பட்டவர்களை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் மர்ம காய்ச்சல் காரணமாக அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories: